தமிழகத்தின் அவசர வரைவு மசோதாவை ஏற்றுக்கொண்டது உள்துறை அமைச்சகம்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கான வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்து, நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கான வரைவு மசோதாவை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.
பின்னர் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட அவசர சட்டத்துக்கான வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க இந்த ஆவணங்கள் போதாது. கூடுதல் ஆவணங்கள் தேவை என்றும் அவற்றை தாக்கல் செய்யுமாறும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாருஷ்ணனிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
இதையடுத்து அவர் இன்று பிற்பகலில் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பித்தார். இதனையடுத்து தமிழக அரசு தாக்கல் செய்த மசோதாவை உள்துறை அமைச்சம் ஏற்றுக்கொண்டது. மேலும் சுகாதாரத்துறை, மனித வள மேம்பாட்டுத்துறை, சட்டத்துறை ஆகியவற்றின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மசோதாவிற்கு 3 அமைச்சகங்களும் ஒப்புதல் அளித்த பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்த உடன் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டம் அமலுக்கு வரும்.