`தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் இந்தி தேர்வு எழுதிய 3 லட்சம் பேர்’-இந்தி பிரச்சார சபா

`தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் இந்தி தேர்வு எழுதிய 3 லட்சம் பேர்’-இந்தி பிரச்சார சபா
`தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் இந்தி தேர்வு எழுதிய 3 லட்சம் பேர்’-இந்தி பிரச்சார சபா

இன்று சட்டப்பேரவையில் `அன்னைத்தமிழை காக்க’ எனக்கூறி தமிழ்நாடு அரசு இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. ஆளும் திமுக அரசும், இந்தி திணிப்புக்கு எதிரான பல போராட்டங்களை அழுத்தமாக முன்னெடுத்து வருகிறது. இது ஒருபக்கம் இருந்தாலும், சமீபகாலமாக தமிழ்நாட்டில் இந்தி படிப்பவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகின்றது என்கின்றன தரவுகள். ஒவ்வொரு வருடமும் இந்த எண்ணிக்கை உயர்வதாக சொல்லப்படுகிறது.

பாரத் இந்தி பிரச்சார சபா சார்பில் இந்தி மொழி பயில்வோருக்கு வைக்கப்படும் பரிட்சைகளை எழுதுவோர் எண்ணிக்கை உயர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இந்த எண்னிக்கை உயர்கிறதாம்.

இந்தி பிரச்சார சபா சார்பில், மொத்தம் 8 பரிட்சைகள் இந்தி பயில்வோருக்கு வைக்கப்படும். அவை –

  1. பரிச்சயா
  2. ப்ராத்மிக்
  3. மத்யமா
  4. ராஷ்ட்ரபாஷா
  5. ப்ரவேஷிகா
  6. விஷாரத் பூர்வத்
  7. விஷாரத் உத்ரத்
  8. ப்ரவீன் பூர்வத்
  9. ப்ரவீன் உத்ரத்    

இந்த பரிட்சைகளை எழுதுவோர் எண்ணிக்கைதான் உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பிரச்சார சபா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், அதன் செயலர் செல்வராஜன் தெரிவித்துள்ள தகவலின்படி, “கடந்த வருடத்தில் சுமார் 3 லட்ச மாணவர்கள், இந்த பரிட்சைகளை எழுதியுள்ளனர். இந்த எண்ணிக்கை நிலையானதாகவும் இருக்கிறது; கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உயர்வாகவும் இருக்கிறது. இவர்களிலேயே 60% பேர் மாணவர்கள், 30% பேர் வேலை தேடுவோர் அல்லது பணியில் இருப்போர், பிற 10% சுய விருப்பத்தின் பேரில் கற்போர்” என்றுள்ளார்.

இந்தி பிரச்சார சபாவின் மேனேஜர் ராம்குமார் பேசுகையில், “கொரோனா ஊரடங்கு நேரத்தில் பலருக்கும் நேரம் நிறைய கிடைத்ததால், அந்த நேரத்தில் தான் பலரும் ஆர்வமாக இந்தி கற்றுள்ளனர். இதில் எந்த இடத்திலும் வயது யாருக்கும் தடையாக இல்லை. டெக்னாலஜியே உபயோகிக்க தெரியாதவர்கள்கூட, இளையோரின் உதவியுடன் ஆன்லைனில் இந்தி கற்றுள்ளனர்.

ஆன்லைனிலேயே தேர்வெழுதி, இணைய வழியில் பரிட்சையும் எழுதி விடைத்தாள்களை கொரியர் வழியாக அனுப்பிவைத்தனர். எங்களுக்கே இதெல்லாம் வியப்பாக இருந்தது. இந்தி கற்பதன் மூலம் இந்திய அளவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதால், இந்தி கற்க நினைக்கும் இளையவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது” என்றுள்ளார்.

சென்னையில் பிப்ரவரி 2021-ல் மட்டும், இந்தி பிரச்சார சபாவில் 30,985 மாணவர்கள் தொடக்க நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும்; 16,167 மாணவர்கள் உயர்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 2014 – 2018க்கு உட்பட்ட காலகட்டத்தில் சென்னையிலிருந்து 39,191 மாணவர்களும்; தமிழ்நாட்டிலிருந்து 48,778 மாணவர்களுக்கு இந்தி பிரச்சார சபாவில் கல்வி பயில பதிந்திருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com