டெல்லியில் மாணவர் அமைப்பினரிடையே கடும் மோதல்-பலர் காயம்: இரவில் நடந்தது என்ன?

டெல்லியில் மாணவர் அமைப்பினரிடையே கடும் மோதல்-பலர் காயம்: இரவில் நடந்தது என்ன?
டெல்லியில் மாணவர் அமைப்பினரிடையே கடும் மோதல்-பலர் காயம்: இரவில் நடந்தது என்ன?

டெல்லியில் இடதுசாரி மற்றும் வலதுசாரி மாணவர் அமைப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் மாணவ, மாணவியர் பலர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் டெல்லியிலுள்ள பிரபல பல்கலைக்கழகமான ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு இடதுசாரி மற்றும் வலதுசாரி ஆதரவு மாணவர் அமைப்புகளிடையே அவ்வப்போது தகராறுகள் எட்டிப்பார்ப்பதுண்டு. இந்நிலையில் ராம நவமியான நேற்று இடதுசாரி ஆதரவு மாணவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பான அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் மாணவர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.



காவேரி தங்கும் விடுதியின் உணவகத்தில் புகுந்து ராம நவமியன்று அசைவ உணவு சமைக்கவும் கூடாது; சாப்பிடவும் கூடாது என கூறி ஏபிவிபி மாணவர்கள் தாக்கியதாக இடதுசாரி மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதேநேரம், பல்கலைக்கழகத்தில் ராம நவமி வழிபாடு நடத்தக்கூடாது என கூறி தங்களது பூஜையை தடுத்ததோடு, இடதுசாரி மாணவர் அமைப்பினர் தாக்கவும் செய்ததாக ஏபிவிபி மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.



ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் இரவு நேரத்தில் இருதரப்பு மாணவர்கள், கற்கள், டியூப் லைட்டுகளை கொண்டு பரஸ்பரம் தாக்கிக்கொண்டதில் பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்த மாணவ, மாணவியரை மருத்துவமனைகளில் அனுமதித்துள்ள டெல்லி காவல்துறையினர், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

இதனிடையே, தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்யக்கோரி இடதுசாரி ஆதரவு மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து பேரணியாக சென்று காவல்நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரு அமைப்புகளின் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com