வெளியானது குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பு! யார் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி? முழு விபரம் இதோ!

வெளியானது குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பு! யார் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி? முழு விபரம் இதோ!
வெளியானது குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பு! யார் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி? முழு விபரம் இதோ!

தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப குரூப் 5ஏ தேர்வு அறிவிப்பாணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. இத்தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 21 வரை www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யார் யாரெல்லாம் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம், படிப்பு உள்ளிட்ட தகுதி விபரங்களை இத்தொகுப்பில் விரிவாகக் காணலாம்.

என்ன பதவிகளுக்கு இந்த குரூப் 5ஏ தேர்வு?

தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத பிரிவு உதவி அலுவலர் பதவிக்கு 74 காலியிடங்களும், நிதிப் பிரிவு உதவி அலுவலர் பதவிக்கு 29 காலியிடங்களும் இந்த அறிப்பாணையில் அறிவிக்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத உதவியாளர் பதவிக்கு 49 காலியிடங்களும், நிதி உதவியாளர் பதவிக்கு 9 காலியிடங்களும் இந்த அறிப்பாணையில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் காலிப்பணியிடங்கள் தமிழக இட ஒதுக்கீடு விதிகளின் படி அந்தந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சம்பளம் எவ்வளவு?

தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத பிரிவு உதவி அலுவலர் பதவிக்கும் நிதிப் பிரிவு உதவி அலுவலர் பதவிக்கும் ஊதியமாக ரூ.36,400 முதல் ரூ.1,34,200 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத உதவியாளர் பதவிக்கும் நிதி உதவியாளர் பதவிக்கும் ஊதியமாக ரூ.20,000 முதல் ரூ.73,700 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வயது வரம்பு எவ்வளவு?

தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத பிரிவு உதவி அலுவலர் பதவிக்கும் நிதிப் பிரிவு உதவி அலுவலர் பதவிக்கும் விண்ணப்பிப்பதற்கு பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 40உம், மற்ற பிரிவினர் அனைவருக்கும் அதிகபட்ச வயது வரம்பாக 35உம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத உதவியாளர் பதவிக்கும் நிதி உதவியாளர் பதவிக்கும் விண்ணப்பிப்பதற்கு பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 35உம், மற்ற பிரிவினர் அனைவருக்கும் அதிகபட்ச வயது வரம்பாக 30உம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

படிப்பு மற்றும் இதர தகுதிகள்:

தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத பிரிவு உதவி அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசில் இளநிலை உதவியாளர் (ஜூனியர் அசிஸ்டென்ட்) அல்லது உதவியாளர் (அசிஸ்டெண்ட்) பதவியில் அல்லது இரண்டு பதவிகளிலும் சேர்த்து ஐந்து ஆண்டுகளுக்கு குறையாத கால அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தலைமைச் செயலகத்தில் நிதி பிரிவு உதவி அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் வணிகம் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசில் இளநிலை உதவியாளர் பதவி, தமிழ்நாடு அமைச்சக சேவை அல்லது தமிழ்நாடு நீதித்துறை பணி ஆகியவற்றில் வழங்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கிய உதவியாளர் பிரிவில் ஐந்தாண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

தலைமைச் செயலகத்தில் சட்டம் மற்றும் நிதி சாராத உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசில் இளநிலை உதவியாளர் பதவி, தமிழ்நாடு அமைச்சக சேவை அல்லது தமிழ்நாடு நீதித்துறை பணி ஆகியவற்றில் வழங்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கிய உதவியாளர் பிரிவில் மூன்றாண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

தலைமைச் செயலகத்தில் நிதி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வணிகம் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசில் இளநிலை உதவியாளர் பிரிவில் அல்லது உதவியாளர் பிரிவில் அல்லது தமிழ்நாடு அமைச்சகப் பணி அல்லது தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியில் அல்லது இரண்டு பிரிவுகளிலும் மூன்றாண்டுகளுக்குக் குறையாமல் சேவையாற்றி இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தேர்வு எப்போது? 

தகுதியுடைய நபர்கள் இன்று முதல் செப்டம்பர் 21 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது ஏதேனும் தவறு செய்துவிட்டால், அதை திருத்தம் செய்வதற்கு செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 29 வரை கால அவகாசம் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கும் தேர்வு என்பது தாங்கள் பணியாற்றும் அலுவலகத்தில் தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடையில்லா சான்றிதழ் பெற்று சமர்பிக்க டிசம்பர் 6 இறுதி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த குரூப் 5ஏ தேர்வு டிசம்பர் 18 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் 12.30 வரை 100 மதிப்பெண்களுக்கு பொதுத் தமிழ் தாளுக்கும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை 100 மதிப்பெண்களுக்கு பொது ஆங்கிலம் தாளுக்கும் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை பொறுத்தவரை சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணம் மற்றும் தேர்வுக்கான விரிவான பாடத்திட்ட விவரங்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

முடிவு எப்போது வெளியாகும்? பணி எப்போது ஒதுக்கீடு செய்யப்படும்?

எழுத்துத் தேர்வின் முடிவுகள் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட டிஎன்பிஎஸ்சி உத்தேசித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வை மே மாதம் நடத்தி பணி ஒதுக்கீடு செய்ய டிஎன்பிஎஸ்சி உத்தேசித்துள்ளது. தேர்வு தொடர்பான மேலதிக விவரங்களை தெரிந்துகொள்ள www.tnpsc.gov.in இணையதளத்தை பார்க்கவும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com