அதிதீவிரமாக பரவும் கொரோனா... நெருங்கும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் - முடிவுதான் என்ன?

அதிதீவிரமாக பரவும் கொரோனா... நெருங்கும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் - முடிவுதான் என்ன?
அதிதீவிரமாக பரவும் கொரோனா... நெருங்கும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் - முடிவுதான் என்ன?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் (சிபிஎஸ்இ) மற்றும் அரசு அதிகாரிகளும் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் தேதிகள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் மே 4 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 7 வரையிலும், 12-ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 15 வரையிலும் நடைபெறும் எனத் தெரிகிறது. எனினும், தேர்வுகள் ஆன்லைனில் நடத்த எந்தத் திட்டமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளைக் கருத்தில்கொண்டு, தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா பரவலின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு தேர்வு மையங்களை மாற்ற மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சிபிஎஸ்இ தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் டாக்டர் சன்யம் பரத்வாஜ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அளித்த பேட்டி ஒன்றில், "நாங்கள் மாணவர்களுக்காக எந்தவொரு வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம். மாணவர்களைப் பொறுத்தவரை, உங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள், எந்த வதந்தியையும் பொய்யான தகவலையும் கேட்க வேண்டாம். நீங்கள் கடுமையாக உழைத்து சிறப்பாக செயல்படுவதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

இது தவிர, தேர்வுகளின்போது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படுவதாக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மத்திய வாரியம் உறுதியளித்துள்ளது.

மத்திய வாரியம் நிலைப்பாடு இப்படி இருக்க, மாணவர்கள் தேர்வுகளை நடத்துவதை ஆதரிக்கும் அதேவேளையில், தேர்வுகளுக்கு மாற்று திட்டம் அவசியம் என்று கருதுகின்றனர். 12-ஆம் வகுப்பு மாணவி யானா என்பவர், "தேர்வுகளை ஒத்திவைப்பதை ஆதரிக்கவில்லை. ஆனால், மத்திய வாரியம் எடுக்கும் எந்த முடிவும் ஒரு நிலையான முடிவாக இருக்க வேண்டும். ஒன்று அட்டவணையின்படி தேர்வுகளை நடத்தக வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோதியா, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு தேர்வுகளை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியில் 6 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வுகளை எழுதப் போகிறார்கள். கிட்டத்தட்ட 1 லட்சம் ஆசிரியர்கள் அதில் ஒரு பகுதியாக இருப்பார்கள். இவை பெரிய அளவிலான கொரோனா பரவுவதற்கு வழிவகுக்கும். தேர்வு மையங்கள் கொரோனா பாதிப்பின் முக்கிய இடங்களாக மாறக்கூடும். குழந்தைகளின் வாழ்க்கையும் ஆரோக்கியமும் எங்களுக்கு மிகவும் முக்கியம் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யுமாறு மையத்தை கேட்டுக்கொள்கிறேன்.

அதற்கு பதிலாக ஆன்லைன் முறை அல்லது உள்மதிப்பீடுகளின் அடிப்படையில் மாணவர்களை தரம் உயர்த்த முடியும். பல நாடுகள் இதைச் செய்துள்ளன, இந்தியாவில் சில மாநிலங்களும் இதைச் செய்கின்றன. சில மாற்று வழிமுறைகளைப் பற்றி சிந்திக்க முடியும். ஆன்லைன் முறை அல்லது உள்மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த முறை தரம் உயர்த்தலாம்" என யோசனை கூறியிருக்கிறார்.

சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துவதை மறுபரிசீலனை செய்து, ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு இதில் தொடர்புடையவர்களை கலந்தாலோசிக்குமாறு சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தி இருக்கிறார். இந்த வலியுறுத்தல்களுக்கு எல்லாம் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னப் பதில் சொல்லப்போகிறது என்பதுதான் தற்போதைய கேள்விக்குறியாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com