நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது ஏன்? ஆளுநர் ஆர்.என்.ரவியின் விரிவான விளக்கம்

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது ஏன்? ஆளுநர் ஆர்.என்.ரவியின் விரிவான விளக்கம்
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது ஏன்? ஆளுநர் ஆர்.என்.ரவியின் விரிவான விளக்கம்

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு என்ன காரணம் என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி. விளக்கியுள்ளார். இதுகுறித்த அவரது ஆவணம், புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது.

கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே சட்டமசோதா தயாரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதை குடியரசு தலைவரின் பார்வைக்கு அனுப்ப, ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியிருந்தது. அதை கடந்த வாரம் (பிப்ரவரி 4) நிராகரித்தரித்து இருந்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. அந்த நிராகரிப்புக்கு என்ன காரணம் என்பதை, ஆளுநர் ரவி சட்டப்பேரவைத் தலைவருக்கு தெரிவித்துள்ளார். அந்த ஆவணம் புதிய தலைமுறைக்கு கிடைத்திருக்கிறது.

அந்த ஆவணத்தின்படி, ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது - “நீட் விலக்கு மசோதாவுக்கு, தமிழக அரசு பரிந்துரைப்பதன் மூலகாரணமாக இருக்கும், நிபுணர் குழு அளித்த அறிக்கையை நான் முழுமையாக படித்துவிட்டேன். சில காரணங்களால், அந்த அறிக்கை முற்றிலுமாக நம்பமுடியாததாக இருக்கிறது. அக்காரணங்கள் இங்கே:

1) நீட் திசையற்று செயல்படுகிறது, மருத்துவ கல்வி பெற உரிய தகுதி உடையோருக்கு எதிராக இருக்கிறது, பொருளாதாரமிக்க - சமூக அந்தஸ்துடன் இருந்து - படிப்பறிவுத்திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கே நீட்டால் அதிக ஆதாயம் இருக்கிறது உள்ளிட்ட பல்வேறு ஆதாரமற்ற விரிவான அனுமானங்கள் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2) இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கே நீட் தேர்வில் அதிக முன்னுரிமை கொடுப்பதாக நிபுணர் குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது. மருத்துவத்துறையின் அடிப்படையே, அறிவியல் பாடத்திட்டம் என்பதாலேயே அப்படி நீட் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் நிபுணர் குழு, இதற்கு மாற்றான கூற்றை முன்வைத்து ‘அனைத்து பாடத்திட்டத்தையும்’ சேர்க்க வலியுறுத்துகிறது. நிபுணர் குழுவின் அப்பரிந்துரை, வினோதமாக இருக்கிறது. தகுதி நிர்ணயிமின்றி செயல்பட வழிவகுப்பது போல உள்ளது.

3) நீட் தேர்வு வருவதற்கு முன்பாக ஆண்டுக்கு 30 முதல் 38 அரசுப்பள்ளி மாணவர்கள், அதாவது மொத்த மாணவர்களில் ஒரு சதவீதத்திற்கு கீழ் தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளார்கள் என சில தரவுகள் சொல்கிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள், மருத்துவத்துக்கு குறைவாக சேருவதற்கு மாநில அரசின் கல்வித் திட்டங்கள் வழி வகுக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சமூக நீதி மறுப்பாக இருக்கும் இந்த நிதர்சனத்தை உணராமல், நிபுணர் குழு அறிக்கை நீட் தேர்வை குறை சொல்லியுள்ளது.

4) நீட் தேர்வு வந்த பிறகு சமூக நீதி மறுக்கப்படுவதாக அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் கோச்சிங் செண்டர் மூலம் பயிலும் மாணவர்களுக்கே நன்மைகள் கிடைப்பதாகவும், அது கிடைக்காத ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும் அறிக்கை சொல்கிறது. எது எப்படியாகியினும், நிபுணர் குழு அறிக்கை மாநில அரசு நடத்தும் பொதுத்தேர்விலும் இப்படியான கோச்சிங்தான் பிரச்னை என்ற நிதர்சனத்தை கூறாமல் கடந்துவிடுகிறது.

இப்படியாக, நிபுணர் குழுவின் பார்வை முழுவதும் காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதுபோல, இருப்பதைவிட்டுவிட்டு வேறொன்றை பார்ப்பது கண்கூடாக தெரிந்துள்ளது” எனக்குறிப்பிட்டுள்ளார் ஆளுநர்.

இதைத்தொடர்ந்து தனது அந்த ஆவணத்தில் வேலூர் கிறிஸ்துவ கல்லூரி மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான எம்பிபிஎஸ் அட்மிஷன் குறித்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நீட் தேர்வு வந்த பிறகு மருத்துவ கல்வி தரம் உயர்ந்திருப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக `அரசியல் சட்ட விதி 46 மற்றும் 47 அவற்றின்படி பட்டியலின மக்கள் & பட்டியலின மலைவாழ் மக்கள் & பின்தங்கிய வகுப்பினர் ஆகியோர் நீட்தேர்வு வந்தபிறகு மெரிட் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்ந்து உள்ளார்கள். அரசியல் சாசனம் 51a உட்பிரிவு ஜே படி, நீட் தேர்வு அனைவருக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது’ என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். அதை தொடர்ந்து, நீட் தேர்வு பட்டியலின மக்கள் & பட்டியலின மலைவாழ் மக்கள் & பின்தங்கிய வகுப்பினர் ஆகியோரின் மருத்துவக் கனவுக்கு உயிர்கொடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேசிய நலன் கருதி நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் இறுதி முடிவு எடுத்துள்ளது. எளியோரை காக்கவே நீட் உருவாக்கப்பட்டுள்ளது என்கையில், அதை உணர்ந்தே அதை நாடு முழுவது அரசு அமல்படுத்தியுள்ள நிலையில், மாநில அரசு அதை நிராகரிக்க உரிமை கோருவது எப்படி சரி?

இதுபோன்ற காரணங்களால், நீட் விலக்கு மசோதா மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இயற்றப்பட்டு இருக்கிறது எனக்கு தெளிவாக தெரிகிறது. இந்திய அரசியல் சாசனம் சட்டப்பரிவு 200 படி தான் நீட் வேண்டுமென்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே சட்டப்பேரவை தலைவர் இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யவும். அதற்காக திருப்பி அனுப்புகிறேன்” என கவர்னர் கையொப்பமிட்டு அனுப்பி உள்ளார்.

இந்த அறிக்கை, கடந்த பிப்ரவரி 1-ம் தேதியே ஆளுநர் கையொப்பமிட்டு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போதுதான் பொதுப்பார்வைக்கு கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com