ப்ளஸ் 1 சேரும் முதல் தலைமுறையினர்... அரசுப் பள்ளி தலைமையாசிரியரால் சாத்தியமான கனவு!
சிலருக்கு தாங்கள் விரும்பிய படிப்பு என்பது லட்சியமாக இருக்கும். ஆனால், படிப்பு என்பதே லட்சியமாக உள்ளவர்கள் பலர். அப்படி, முதுமலை வனப்பகுதியில் பழங்குடியின கிராமத்தை சேர்ந்த 6 மாணவிகள் முதல் தலைமுறையாக 11 ஆம் வகுப்பில் சேர உள்ளனர். 'புதிய தலைமுறை'யின் 'கனவு ஆசிரியர்' விருது பெற்ற தலைமை ஆசிரியரின் முயற்சியால் இது சாத்தியமாகியிருக்கிறது.
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது பென்னை பழங்குடியினர் கிராமம். வைக்கோல் புற்களால் வேயப்பட்ட குடிசைகள், மண் சாலை, மூங்கில் பாலங்களோடு எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்த கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி மட்டுமே ஒரு கல்விக்கூடம். அதற்கு மேல் படிக்க நகர் பகுதிக்குத்தான் வரவேண்டும் என்பதால் ஆரம்பப் பள்ளியுடன் படிப்பை விட்டவர்கள்தான் அதிகம்.
பழங்குடியின மாற்று குடியமர்வு திட்டத்தின் கீழ், வனத்தை ஒட்டிய பகுதியில் அரசு குடியமர்த்தினாலும், 15 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் தற்போது வனப்பகுதிக்கு உள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பள்ளி இடைநின்றவர்களை தேடிப்பிடித்தார் முக்கட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன். பென்னை கிராமத்தில் 10ஆவது முடித்து 11 ஆவது படிக்க ஆசைப்பட்டு தவித்து நின்ற 6 மாணவிகளை இப்போது 11 ஆம் வகுப்பில் சேர்த்ததோடு, அவர்கள் படிப்புக்கான ஏற்பாடுகள், உதவிகளையும் செய்துள்ளார்.
2019-20 ஆண்டுக்கான புதிய தலைமுறையின் கனவு ஆசிரியர் விருதை பெற்றவரான சமுத்திரப்பாண்டியனின் முயற்சியால், பள்ளியில் இருந்து இடைநின்ற 24 மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் முக்கட்டி பள்ளியில் சேர்க்கப்பட்டனர். கல்வி என்ற ஆயுதத்தை ஏந்திவிட்டால், வாழ்க்கைப்போரில் இவர்களும் வெற்றிகளை வசமாக்கலாம்.