நெல்லை: நீட் தேர்வு எழுதவந்த பெண்ணின் தாலி, மெட்டியை கழட்ட சொன்ன அதிகாரிகள்..!
நெல்லையில் திருமணமாகி நான்கு மாதங்களே ஆன பெண், தாலி மற்றும் மெட்டியை கழற்றி கொடுத்துவிட்டு நீட் தேர்வு எழுத சென்றார்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர் பட்டம் முடித்து விட்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயின்று வந்துள்ளார். இன்றைய தினம் நீட் தேர்வு எழுத நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஜான்ஸ் பள்ளி தேர்வு மையத்திற்கு சென்றார்.
அப்போது தேர்வு அறையில் ஆபரணங்கள் அணிந்து செல்ல அனுமதி இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், காலில் அணிந்திருந்த மெட்டியை கழட்டி, அப்பெண் குடும்பத்தினரிடம் கொடுத்துவிட்டு தேர்வு அறைக்கு சென்றார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நீட் தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களில், தமிழ் மொழியில் விழிப்புணர்வு பதாகை வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.
நீட் தேர்வு மைய வளாகத்திற்குள், வரும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் ஒவ்வொரு மையத்திலும் வைக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிவது கட்டாயம், கையுறை அணிய வேண்டும், தனியாக தண்ணீர் பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள. இதற்காக வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பாதைகளில் தமிழில் எந்த வாசகங்களும் இடம் பெறவில்லை.