UPSC தேர்வில் வெற்றி பெற 3 உத்திகள் - தமிழக அளவில் முதல் இடம் பிடித்த கணேஷ் குமார் பாஸ்கர்
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியானது. இதில் நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர் தேசிய அளவில் 7 ஆம் இடம் பிடித்துள்ளார். மேலும், தமிழக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதுகுறித்து அவரிடம் புதியதலைமுறை நேர்காணல் நடத்தியது. அப்போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:
உங்கள் குடும்பம் பற்றி சொல்ல முடியுமா?
அப்பா, அம்மா, நான் மற்றும் தங்கை. அப்பா மத்திய அரசு ஊழியர், அம்மா வீட்டு நிர்வாகி, தங்கை இளங்கலை பொறியியல் பயின்று வருகிறார். சொந்த ஊர் நாகமலை புதுக்கோட்டை. தற்போது வசிப்பது நாகர்கோயில்.
நீங்கள் என்ன படித்தீர்கள்?
கணினியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டமும், தொழில் மேலாண்மை துறையில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கிறேன்.
ஐ.ஏ.எஸ் ஆக வேண்டுமென்று எப்போது உங்களுக்குத் தோன்றியது?
ஐ.ஏ.எஸ் இல்லை ஐ.எஃப்.எஸ்(வெளியுறவுத்துறை). 2016 ஆம் ஆண்டு தொழில் மேலாண்மை பயிலும் போது தோன்றியது.
தொழில் மேலாண்மை படித்துக் கொண்டிருக்கும் போது ஏன் இந்த திடீர் ஆர்வம்?
எப்படியும் ஒரு நிறுவனத்தில் தான் மேலாண்மை பணி செய்யப் போகிறோம். ஏன் அரசு பணியில் நிர்வகிக்கும் ஆளாக மாறக் கூடாது என்று நினைத்தேன். வீட்டில் சொன்னேன். அனைவரும் உற்சாகப்படுத்தினர். தந்தை சரியான முடிவு என்று வழிமொழிந்தார்.
பொதுவாக பெரும்பாலானோர் ஐ.ஏ.எஸ். ஐ தேர்ந்தெடுப்பார்கள், நீங்கள் ஐ.எஃப்.எஸ்-ஐ தேர்ந்தெடுக்கக் காரணம்?
எனக்கு வெளிநாட்டு விவகாரத்தில் எப்போதுமே நாட்டம் உண்டு. அதனால் விண்ணப்பிக்கும் போது ஐ.எஃப்.எஸ் என்று தேர்வு செய்தேன்.
இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் வந்துவிட வேண்டும் என்று உறுதியுடன் இருந்தீர்களா?
முதல் 100 இடங்களுக்குள் வந்தால் தான் ஐ.எஃப்.எஸ். (வெளியுறவுத்துறை) கிடைக்கும். நான் 100 இடங்களுக்குள் வந்துவிடுவேன் என்ற உறுதியுடன் இருந்தேன். நல்வாய்ப்பாக 7 வது இடத்தைப் பெற்றிருக்கிறேன்.
முதல்முறையிலேயே வெற்றிப் பெற்றுவிட்டீர்களா?
இல்லை. இது இரண்டாம் முறை. முதல் முறை சரியான முன் தயாரிப்பு இன்றி தேர்வை எதிர் கொண்டேன். முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற வில்லை. இரண்டாம் முறை முழுத் தயாரிப்புடன் எதிர்கொண்டேன், வெற்றிப் பெற்றேன்.
உங்கள் முழுத் தயாரிப்பு முறை எப்படி இருந்தது?
முதல்நிலைத் தேர்வுக்கு முன்று மாதங்களுக்கு முன்பு வரை ஓர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். அச்சமயத்தில், பணி நாட்களில் 4 மணி நேரமும், விடுமுறை நாட்களில் 10 மணி நேரமும் தேர்வுக்காகத் தயார் படுத்திக் கொண்டேன். முதல்நிலைத் தேர்வுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னால் பணியிலிருந்து விலகினேன். ஒரு நாளைக்கு 12மணி நேரம் தேர்வுக்குத் தயார்படுத்திக் கொண்டேன்.
இடைவேளை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?
1 மணி நேரத்திற்கு ஐந்து நிமிடங்களும், 3 மணி நேரத்திற்கு 1 மணி நேரமும் இடைவேளை எடுத்துக் கொள்வேன்.
பயிற்சி வகுப்புகளுக்கு செல்லவில்லையா?
தேர்வுப் பயிற்சிகளை இணையத்திலையும், நேர்முகத் தேர்வுப் பயிற்சிகளை சில மையங்களில் எடுத்துக்கொண்டேன்.
எல்லோரும் வீட்டில் இருந்து தேர்வுக்கான பயிற்சியை மேற்கொள்ளலாமா?
பொதுப்படையாக அப்படி சொல்ல முடியாது. ஒவ்வொரு தனிமனிதருக்கும் அது வேறுபடலாம். எனக்கு கணக்கு நன்றாக வரும். அதனால் கணக்கைத் தேர்ந்தெடுத்தேன். சிலருக்கு வேறு சிலப் பாடங்கள் நன்றாக வரலாம். சிலருக்கு கூடுதல் பயிற்சித் தேவைப்படலாம். நானே சிலப் பயிற்சிகளுக்கு என்னை சோதித்துப் பார்த்துக்கொள்ள சில மையங்களுக்கு சென்று பயிற்சி பெற்றிருக்கிறேன். அதனால் அப்படி பொதுமைப்படுத்த முடியாது.
இந்தப் பயிற்சி மேற்கொள்ளும்போது சமூக வலைத்தளங்களிலிருந்து விலகியிருந்தீர்களா?
இல்லை. நான் விலகவில்லை. அதே நேரம் சமூகவலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் நபருமில்லை.
பொழுதுபோக்குக்காக நீங்கள் என்ன செய்வீர்கள்?
பொழுதுபோக்குக்காக படங்கள் பார்ப்பேன். இணையத் தொடர்கள் பார்ப்பேன்.
குடிமைப் பணித் தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு, நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
தேர்வுக்குப் படிக்கத் தொடங்கும் முன் செய்ய வேண்டிய மூன்று செயல்கள்.
1) புரிதல்
2) உத்திகள்
3) பயிற்சி
1) புரிதல்: முதல் தேர்வுமுறையைப் பற்றிய சரியான புரிதல் வேண்டும். அதன் நடைமுறைகள் குறித்துத் தெளிவு வேண்டும்.
2) உத்திகள்: உங்களது பலம், பலவீனம் இரண்டையும் திறந்த மனதோடு அணுகி, தேர்வை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள் என்பதற்கு உத்திகளை வகுத்துக் கொள்ளுங்கள்.
3) பயிற்சி: உத்திகள் வகுத்தப் பிறகுத் தேர்வுக்காகத் தொடர் பயிற்சிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்.
இந்த மூன்றையும் கடைபிடித்தால் உறுதியாக வெற்றி பெறலாம்.
கட்டுரை : முரளிகிருஷ்ணன் சின்னதுரை