ஆன்லைன் வகுப்புகளுக்காக 50 கி.மீ பயணிக்கும் அவலம் - இண்டர்நெட் வசதி கேட்டு கடிதம்
கொரோனா ஊரடங்கு மற்றும் நிசார்கா புயலால் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெற 50 கி.மீ பயணம் செய்யவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவின் கடற்கரை கிராமங்களில் தொற்றுநோய், புயல் என அடுத்தடுத்து தாக்கி அங்கிருக்கும் குழந்தைகளுக்கு கல்வி கற்பதில் இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது. ஜூன் மாதத் தொடக்கத்திலிருந்தே ரத்னகிரி மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இணையதள வசதி துண்டிக்கப்பட்டுவிட்டது. ஒருமாதத்திற்கும் மேலாக சரிசெய்யப்படாத நிலையில், குழந்தைகள் உரிமை அமைப்பான என்.சி.பி.சி.ஆரிடம் உதவி கேட்டு ஒருவர் வந்துள்ளார்.
செல்லுலார் நிறுவனங்கள் மற்றும் அந்த மாவட்ட மாஜிஸ்திரேட் ஆகியோரை அணுகி மிக விரைவில் இணைய வசதியை திரும்பக் கொண்டுவருவதற்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உறுதி செய்துள்ளதாக என்.சி.பி.சி.ஆரின் தலைவர் பிரியங் கனூங்கோ தெரிவித்திருக்கிறார். மாவட்ட மாஜிஸ்திரேட் , விரைவில் இணையப் பிரசனை அந்தப் பகுதியில் தீர்க்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
ஜூன் 3 அன்று நிசார்கா புயலால் பயங்கர தாக்குதலை சந்தித்த அந்த கடலோர கிராமத்தில் வசிப்பவர்களுக்கு அதற்குபின்பு எந்த மொபைல் நெட்வொர்க்கும் கிடைக்கவில்லை என்பதையும் கனுங்கோ ஜூலை 23 ஆம் தேதி மாஜிஸ்திரேட்டுக்கு கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த கிராமப்பகுதிகளில் இருந்து மட்டும் சுமார் 200 மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெறுகிறார்கள். ஊரடங்கு மற்றும் புயலால் 50 கி.மீ பயணிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். உடனே அவர்களுக்கு உதவி தேவை.
இந்த விஷயத்தில் விரைவில் இணையவசதியை மீட்டெடுக்கவும், தேவையான வழிகாட்டுதல்களை வழங்கவும் என்று அன்புடன் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் குழந்தைகள் கல்வி குறித்து எந்தவொரு மன அழுத்தம் மற்றும் தேவையற்ற பிரச்னைகளுக்கு ஆளாகக் கூடாது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
செய்தி நிறுவனமான பிரஸ் ட்ரஸ்ட் ஆன் இந்தியாவுடன் பேசிய கனுங்கோ, என்.சி.பி.சி.ஆர் தொடர்ந்து அதிகாரிகளைப் பேசி இப்போது ஒரு நெட்வொர்க் மட்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற நெட்வொர்க் பிரச்னைகளை விரைவில் தீர்ப்போம் என்றும் உறுதி அளித்திருக்கிறார். இந்த காலத்தில் குழந்தைகளுக்கு தடையில்லா இணையவசதி வழங்குவது அவசியம் என்பதையும் வலியுறுத்தி உள்ளார். தொற்றுநோய் ஊரடங்கால் நாடு முழுவதும் இணையவழி கற்பித்தல் மற்றும் கற்றல் நடந்துவருகிறது. ஆனால் இதுபோன்ற இணையப்பிரச்னைகளால் கிராமப்புறக் குழந்தைகளுக்கு டிஜிட்டல் கல்வி தொலைதூர கனவாக மாறியுள்ளது என்றும் கூறியுள்ளார்.