பொறியியல் பொதுப் பிரிவுக் கலந்தாய்வு இன்று தொடக்கம்..!
பொறியியல் படிப்புக்கான பொதுப் பிரிவுக் கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது.
பொறியியல் படிப்புக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. இதில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் படைவீரர் வாரிசுகள் எனப் பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் பொறியியல் படிப்புக்கான பொதுப் பிரிவுக் கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. ஆன்லைன் வழியில் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது.
www.tneaonline.in என்ற இணையதளம் மூலம் வீட்டிலிருந்தபடியே கலந்தாய்வில் பங்கு பெறலாம். உதவி தேவைப்படும் மாணவர்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 48 உதவி மையங்களில் சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம். 4 சுற்றுகளாக நடைபெற உள்ள கலந்தாய்வு 28-ஆம் தேதி நிறைவடைகிறது.
முதல் சுற்று மாணவர்கள் இன்று முதல் 10ஆம் தேதிவரை கட்டணம் செலுத்தலாம். கட்டணம் செலுத்திய பிறகுதான் அடுத்தடுத்த நடைமுறைகளுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி பிரிவு மாணவர்கள் ஆயிரம் ரூபாய் கட்டணமும், இதர பிரிவினர் 5 ஆயிரம் ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்.