தமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து தெளிவில்லை - திமுக எம்பி கனிமொழி
வெளிமாநிலங்களில் உள்ள தமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து தமிழக அரசின் அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் செய்யப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் வெளிமாநிலங்களில் உள்ள தமிழ்வழி தனித் தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து தமிழக அரசின் அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்
இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி, ''இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டாலும், வெளிமாநிலங்களில் உள்ள தமிழ்வழி தனித்தேர்வர்களுக்கான தேர்ச்சி குறித்து தமிழக அரசின் அரசாணையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
வெளிமாநிலங்களில் சில தமிழ்ப்பள்ளிகள் தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தி வருகின்றன. அப்பள்ளிகள் வாயிலாகத் தேர்வு எழுத இருந்த மாணவர்களையும் தனித்தேர்வர்களாகக் கருதிடாமல் அனைவருக்கும் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி வழங்கிட வேணடும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.