தொலைநிலைக்கல்வி திறக்கும் புதிய கதவுகள்... கல்வியாளர் பாரதிபாலன் நம்பிக்கை

தொலைநிலைக்கல்வி திறக்கும் புதிய கதவுகள்... கல்வியாளர் பாரதிபாலன் நம்பிக்கை
தொலைநிலைக்கல்வி திறக்கும் புதிய கதவுகள்... கல்வியாளர் பாரதிபாலன் நம்பிக்கை

தற்போதைய சமூகச் சூழலில் திறந்தநிலை மற்றும் தொலைநிலைக்கல்வி உலகம் முழுவதும் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இதுதொடர்பான வாய்ப்புகளையும், வளங்களையும் விளக்குகிறார் பள்ளிசாரா மற்றும் திறந்தநிலை, தொலைநிலைக்கல்வித் துறையில் அனுபவம் பெற்ற கல்வியாளர் பாரதிபாலன்.

கொரோனா தொற்றால் சர்வதேச அளவில் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொலைநிலைக்கல்வி எப்படி உள்ளது?

தற்போதைய கல்வி ஆண்டு ஒரு மாறுபட்ட சூழலில் தொடங்குகிறது.  வெளிநாடுகளில் உயர்கல்வி பெறவேண்டும் என்று நினைத்தவர்கள் அதை மாற்றிக்கொண்டுள்ளார்கள். சிலர் கல்வி வளாகங்களுக்குச்  சென்று படிப்பதைத் தவிர்த்து வீட்டிலிருந்தே உயர்கல்வியைப் பெற விரும்புகின்றனர். இது காலத்தின் மாற்றம். புதிய எதார்த்தம்.   

உலகத் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம், லண்டன்  இம்பீரியல் கல்லூரி போன்றவை இணைய வழியாகவும் தொலைநிலைக்கல்வியில் பகுதிநேரமாகவும் படிப்புகளை வழங்குவது பற்றி மிகத் தீவிரமாக திட்டமிட்டுவருகின்றன.

அஞ்சல்வழிக் கல்வி, திறந்தநிலை மற்றும்  தொலைநிலைக்கல்வி இரண்டிற்கும் உள்ள  வேறுபாடுகள் என்ன?

இரண்டிற்கும் சொற்குழப்பம் இல்லாமல் அவற்றின் நுட்பமான வேறுபாடுகளை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அஞ்சல்வழிக் கல்வி என்பது பாடத்திட்டத்திற்குரிய பாடக்குறிப்புகள் மாணவர்களுக்கு  அஞ்சலில் அனுப்பிவைப்பார்கள். அதை மாணவர்கள் தாங்களாகவே படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்டில் குறிப்பிட்ட சில நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.

திறந்தநிலை  மற்றும் தொலைநிலைக்கல்வி சற்று மாறுபடுகிறது. இங்கு பாடப்புத்தகங்கள் மாணவர்கள் சுயமாகக் கற்றுக்கொள்ளும் வகையில், அறிவியல்பூர்வமாக எளிமையாகவும் விரிவாகவும் தயாரிக்கப்படுகின்றன. பாடநூல்களுடன் ஒலிஒளிக் காட்சிகளும், மின்னணுப் பாடங்களும் வழங்கப்படும். பாடங்களை விரிவாகப் புரிந்துகொள்வதற்கு யூடியூப் லிங்க், கூடுதல் பாடநூல்கள் குறித்த விளக்கமும் அளிக்கப்படும்.

மாணவர்கள் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறுவதற்காக கவுன்சிலிங்  வகுப்புகள்  தொடர்ச்சியாக  நடத்தப்படும். அது மட்டுமல்லாமல், மாணவர்களின் கற்றலை தொடர்ந்து மதிப்பீடு செய்வதற்காக அசைன்மென்ட் வழங்கப்படும். அதற்காக வழங்கப்படும்  மதிப்பெண்கள்  இறுதித்தேர்வில் சேர்த்துக்கொள்ளப்படும். 

இந்தியாவில் எந்தெந்த கல்வி நிறுவனங்கள் தொலைநிலைப் படிப்புகளை வழங்குகின்றன?

இந்தியாவில் உள்ள மொத்த பல்கலைக்கழகங்களில் 15 திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள், அவற்றில் ஒன்று இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம். சென்னையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்  உள்பட 14 மாநில திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. மேலும், இந்தியா முழுவதும் 110 பல்கலைக்கழகங்கள் நேரடி முறையிலும் தொலைநிலைக்கல்வி வழியாகவும் படிப்புகளை வழங்கிவருகின்றன.

தொலைநிலைக் கல்வியில் சேர்ந்து படிக்க என்ன தகுதிகள் பெற்றிருக்கவேண்டும்?

பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். தொலைநிலைக்கல்வியில் ஏதாவது ஒரு இளநிலைப்  படிப்பைப் படித்துக்கொண்டே பணியாற்றமுடியும். பணி அனுபவத்தோடு பட்டமும் கிடைக்கும். பிளஸ் டூ தேர்ச்சி பெறாதவர்கள் தொழில் சார்ந்த சான்றிதழ், பட்டயப் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

இளநிலை அறிவியல் மற்றும் கலைப் பாடங்களில் பட்டங்களைப் பெற்று  ஆசிரியப் பணியில் அல்லது வேறு பணிகளில் உள்ளவர்கள் தொலைநிலைக்கல்வியில் சேர்ந்து அதே பாடப்பிரிவிலோ அல்லது வேறு பாடங்களிலோ முதுகலைப் பட்டம் பெறமுடியும். முதுநிலை உளவியல், எம்சிஏ, எம்பிஏ, மீடியா, விஷூவல் கம்யூனிக்கேஷன், பிலிம் ஆர்ட்ஸ், நாடகம் மற்றும் அரங்கக் கலைகள், தொல்லியல், பேஷன் டிசைனிங், சமூகப் பணி, போலீஸ் நிர்வாகம், குற்றவியல், லிங்க்விஸ்டிக்ஸ் பாடப்பிரிவுகளில் முதுகலைப் படிப்புகள் நேரடிமுறையில் புகழ்பெற்றவையாக உள்ளன. அவற்றை தொலைநிலைக்கல்வி வழியாகவும் படிக்கலாம்.

அரசு வேலைவாய்ப்புக்கும், பதவி உயர்வுக்கும்   தொலைநிலைக்கல்வி அங்கீகரிக்கப்பட்டுள்ளதா?

நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களில் சட்டம் இயற்றப்பட்டு,  பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவில் தொலைநிலைக் கல்விக்கு முறையான அனுமதிபெற்ற பிறகே உயர்கல்வி நிறுவனங்கள் படிப்புகளை வழங்குகின்றன. தொலைநிலைக்கல்வியில் பாடவாரியான அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழுவிடம் பெறவேண்டும். இளங்கலை தமிழ், இளநிலை கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்பிஏ  என்று ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக  அனுமதி வாங்கவேண்டும்.

பிஎட் படிப்பு என்றால் கூடுதலாக NCTE (National council for teacher education) அனுமதியும் தேவை. அப்படி அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்ந்து படிப்பது நல்லது. பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதியோடு நடத்தப்படுகின்ற அனைத்துப் படிப்புகளும் மத்திய, மாநில அரசுகளின் பணி நியமனத்திற்கும்  பதவி உயர்வுக்கும் ஏற்புடையது என  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொலைநிலைக் கல்விக்கு வரவேற்பு  எப்படி உள்ளது?

தொலைநிலைக்கல்வியை ஒரு வரப்பிரசாதமாகவே உலக மாணவர்கள் கருதுகின்றனர். சிறந்த உதாரணமாக பிரிட்டிஷ் திறந்தநிலை பல்கலைக்கழகத்தைக் குறிப்பிடலாம். உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள், நடிகர்கள், ஆளுமைகள்  பலரும்  அங்கு படித்தவர்களாக உள்ளனர்.  கல்லுரிகள்,  பல்கலைக்கழகங்களில் நேரடியாக படிப்பதைவிட, இங்கு சேர்வதற்குத்தான் அதிக போட்டி. தற்போது, அங்கு 1,74,000 மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்த பலரும்  இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பெரும் பொறுப்புகளை வகிப்பவர்களாக உயர்ந்துள்ளனர். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் படித்து பலர் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வென்று பல்வேறு உயர் பணிகளைப் பெற்றுள்ளனர். புகழ்பெற்ற ஆட்சிப்பணி அதிகாரிகளில் பலரும் கூடுதல் பட்டங்கள் பெறுவதற்கு இங்கு சேர்ந்து படித்துவருகின்றர்.

நேரடியாக கல்லுரிகளில் சேர்ந்து படிப்பதைப் போன்ற வசதிகள் தொலைநிலைக் கல்வியில் கிடைக்குமா?    

அதுவொரு வகை அனுபவம். இது வேறுபட்ட அனுபவம். தொலைநிலைக்கல்வியில் வகுப்பறைச் சூழலை, அந்த உணர்வினைப் பெறுவதுடன் கூடுதலான தரத்தையும் பெறக்கூடிய வாய்ப்புகளை தற்போது தொழிநுட்பம் நமக்குத் தந்திருக்கிறது. தொலைநிலைக்கல்வியில் பாடங்களை வழங்குவதற்கும் கல்வியைப் பெறுவதற்கும் இணையமும் மின்னணுக்கருவிகளும் பெரும் துணையாக இருக்கின்றன.

நேரடிமுறையில் ஒருவர் படிப்பதற்கும், தொலைநிலைக் கல்வியில் படிப்பதற்கும் பாடத்திட்டத்தில் ஏதாவது மாற்றங்கள் உள்ளனவா?

நேரடிக் கல்விமுறைக்கும் தொலைநிலைக்கல்வி முறைக்கும் ஒரே பாடத்திட்டம்தான். ஒரே மாதிரியான தேர்வுமுறைகள்தான்.  மதிப்பீடு செய்வதும் ஒரே மாதிரியாகத்தான்.  இரண்டிற்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், நேரடியாகப் பயிலும் மாணவர்களைவிட தொலைநிலைக்கல்வியில் நேரத்தை அதிக அளவில்  கற்பதற்காக செலவிடுகிறார்கள். பயண நேரம் கிடையாது. கூடுதலாக பல்வேறு ஊடகங்களின் வாயிலாக கற்கும் வசதியையும் பெறுகிறார்கள்.

ஆனால் தொலைநிலைக்கல்வி பரவலாக மாணவர்களைச்  சென்றடையவில்லையே?

திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வியை நாம் சரியாக புரிந்துகொள்ளவில்லை. பள்ளிக்கல்வியில் இருந்தே மாணவர்களிடம் இந்தக் கல்விமுறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.  இன்னும் கிராமப்புறங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் பயிலக்கூடிய ஒரு கல்வி முறையாகத்தான் அதை  நினைக்கிறார்கள். அஞ்சல்வழியாக படிக்கக்கூடிய படிப்பு என்பதும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. தொலைநிலைக்கல்வி பற்றிய விரிந்த பார்வை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சமூகத்திற்கும் தேவைப்படுகிறது.

சுந்தரபுத்தன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com