\
தொலைதூரக் கல்வி: அண்ணாமலை பல்கலைக்கழகம் சட்டப்படிப்பை நடத்த தடை நீட்டிப்பு

தொலைதூரக் கல்வி: அண்ணாமலை பல்கலைக்கழகம் சட்டப்படிப்பை நடத்த தடை நீட்டிப்பு

தொலைதூரக் கல்வி: அண்ணாமலை பல்கலைக்கழகம் சட்டப்படிப்பை நடத்த தடை நீட்டிப்பு
Published on

தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்பை நடத்த அண்ணாமலை பல்கலைக் கழகத்துக்கு விதித்த தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகம், தொலைதூரக் கல்வி மூலம், மூன்று ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு சட்டப் படிப்புகளை நடத்தி வருவதற்கு தடை கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் இல்லாமல் தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை நடத்துவதாக மனுவில் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க தடை விதித்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய பார் கவுன்சில் தரப்பில், தொலைதூரக் கல்வியில் சட்டப் படிப்புக்கான வகுப்புகளை நடத்த அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், இந்தியா முழுவதும் 1600 சட்ட கல்லூரிகள் இயங்குவதாக பார் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட தலைமை நீதிபதி, இந்த கல்லூரிகளில் போதுமான தகுதியான ஆசிரியர்கள் உள்ளனரா என கேட்டார். தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்பு வழங்கப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிப்பது அவசியம் என இந்திய பார் கவுன்சிலுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவுக்கு பல்கலைக்கழக மானியக் குழு பதிலளிக்க மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கி, வழக்கை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்க அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com