தருமபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிகரித்த மாணவர் சேர்க்கை: மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்

தருமபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிகரித்த மாணவர் சேர்க்கை: மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்

தருமபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிகரித்த மாணவர் சேர்க்கை: மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்
Published on

கொரோனா பொதுமுடக்க வருவாய் இழபபால், தருமபுரி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட அப்பள்ளியில் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக, கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழக அரசு பள்ளிகள் எதையும் திறக்க அனுமதிக்கவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், தனியார் பள்ளிகளில் இணைய தளம் வழியாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என அரசு கட்டுப்பாடு விதித்திருந்தாலும்கூட, கொரோனா காலத்தில் வேலை மற்றும் வருவாய் குறைவாக இருப்பதால் பெற்றோர்கள் சிலருக்கு தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் பெரும் சுமையாகவே இருக்கிறது. இதனால் அவர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க விரும்புகின்றனர்.

அந்தவகையில் தருமபுரி நகரப்பகுதியில் அமைந்துள்ள அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு, தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்திருந்த ஏராளமான பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை இப்போது அரசுப் பள்ளிக்கு மாற்றி வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தருமபுரி அரசு அவ்வையார் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது. தொடர்ந்து மாணவிகள் சேர்க்கை அதிகரித்து வருவதால், தனியார் பள்ளிகளை போல அவ்வையார் அரசு மகளிர் மேல் நிலை பள்ளி ஆசிரியர்கள், வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி அதன்மூலமாக மாணவிகளுக்கு பாடங்களை கற்பித்து வருகின்றனர்.

மேலும் ஒவ்வொரு நாளும் கல்வி தொலைக்காட்சி வழியாக இன்று என்ன பாடம் நடத்தப்பட உள்ளது என்பது குறித்த குறிப்பை மாணவிகளின் பெற்றோருக்கு வாட்ஸ் அப் செய்தி மூலமாக அனுப்பி, பிள்ளைகளை பாடம் கவனிக்க அறுவுறுத்துமாறு ஆசிரியர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

தொடர்ந்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடங்களைப் படிக்கும்படியும், பின் அதை பார்க்காமல் எழுதி, எழுதியதை போட்டோவாக எடுத்து தங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பவும் சொல்கின்றனர் ஆசிரியர்கள். அப்படி அனுப்பிய பிறகு ஆசிரியர்கள் அதில் பிழை திருத்தம் செய்து மீண்டும் மாணவிகளுக்கு அனுப்புகின்றனர்.

இப்படி தனியார் பள்ளி ஆசிரியர்களை போல செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பெற்றோர் தரப்பிலிருந்து ஏராளமான பாராட்டுகள் குவிகிறது. இந்தப் பள்ளியில் தங்களின் பிள்ளையை படிக்க வைக்க வேண்டுமென புதிதாக ஏராளமான பெற்றோர்கள் முன்வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஒருசில தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுத்து வருவதால் அத்தகைய மாணவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை எண் மூலமும் இப்பள்ளியில் சேர்க்கை நடைபெறுகிறது.

- சே.விவேகானந்தன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com