`நீட் தேர்வை நடத்துவது உகந்ததாக இருக்காது`` - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

`நீட் தேர்வை நடத்துவது உகந்ததாக இருக்காது`` - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
`நீட் தேர்வை நடத்துவது உகந்ததாக இருக்காது`` - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
Published on

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட சூழலில் , அகில இந்திய அளவில் நடத்தப்படும்  “நீட்”  போன்ற நுழைவுத்தேர்வுகளை  நடத்துவது உகந்ததாக இருக்காது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக ஏற்கனவே மத்திய அரசு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ளது, பல்வேறு மாநிலங்களும் தங்கள் மாநில 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ளன.  இப்பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து கடந்த மூன்று தினங்களாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர், ஊடகவியலாளர்கள், சுகாதாரம் மற்றும் உளவியல் நிபுணர்கள் என பலரிடமும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் கருத்துகள் கேட்டறியப்பட்டன. பல தரப்பினரும் பொதுத்தேர்வு நடத்துவது பற்றி ஆதரவு மற்றும் எதிர் கருத்துகள் தெரிவித்தனர்.

கொரோனா 2 ஆம் அலை இப்போது தீவிரமாக இருந்து வருகிறது, 3 வது அலை வரவும் வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த இயலும் என்ற விதிகள் இருப்பதால், தடுப்பூசி போடப்படாத மாணவர்களை தேர்வு எழுத செய்வது நோய்த்தொற்றை அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர். மேலும் தேர்வினை தள்ளிவைப்பது மாணவர்களை மனதளவில் பாதிக்கும் என வல்லுநர்கள் கருதுவதால் இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்துசெய்யப்படுகிறது.

மாணவர்களுக்கு மதிப்பெண் எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்ய உயர்கல்வித்துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்களை கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு முடிவு செய்யப்படும். அந்த முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதனடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும். 

கொரோனா பெருந்தொற்றினால் தமிழ்நாட்டில் பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட சூழலில் , அகில இந்திய அளவில் நடத்தப்படும்  “நீட்”  போன்ற நுழைவுத்தேர்வுகளை  நடத்துவது உகந்ததாக இருக்காது என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது. இதுகுறித்த அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளிவராத நிலையில் , உயர்கல்விக்காக நடத்தப்படும் பல்வேறு நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கொரோனா பெருந்தொற்று காலத்திலும், மாணவர்களின் உடல்நலன் மற்றும் மனநலனை கருத்தில்கொண்டு மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், மாநில கல்வித்திட்டத்தின் அடிப்படையில், உயர்க்கல்வி சேர்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்”என தெரிவித்திருக்கிறார் . 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com