`உங்கள் அறிவு, கலை அறிவாக - கல்வி அறிவாக - பகுத்தறிவாக வளரவேண்டும்”-முதல்வர் மு.க.ஸ்டாலின்

`உங்கள் அறிவு, கலை அறிவாக - கல்வி அறிவாக - பகுத்தறிவாக வளரவேண்டும்”-முதல்வர் மு.க.ஸ்டாலின்
`உங்கள் அறிவு, கலை அறிவாக - கல்வி அறிவாக - பகுத்தறிவாக வளரவேண்டும்”-முதல்வர் மு.க.ஸ்டாலின்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத்திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது பேசிய அவர், “ 'ஒரு போட்டியில் கலந்து கொண்டோம் - வெற்றி பெற்றோம் - பரிசு பெற்றோம்' என்று இல்லாமல் தொடர்ச்சியாக நீங்கள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அதேபோல 'வேலைக்கு போய்விட்டோம், திருமணம் நடந்துவிட்டது, கை நிறைய சம்பாதிக்கிறோம்' என்பதில் மட்டும் நிறைவடைந்து விடாமல் கலைத் தொண்டையும் இத்துடன் சேர்த்து அனைவரும் தொடர வேண்டும்” என மாணவர்கள் மத்தியில் பேசினார்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைத் திறனை கண்டறிந்து, வெளிக்கொண்டு வரும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் கலைத் திருவிழா நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 13,210 பள்ளிகளை சார்ந்த 28,42,993 மாணவர்கள் இந்த கலைத்திருவிழாவில் பங்கேற்ற நிலையில், மாநில அளவில் 17,038 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 1,759 மாணவர்கள் பரிசு பெற்றனர். மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களில் தர வரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

கலைத் திருவிழாவில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டத்திற்கான முதலிடம் கோவை மாவட்டத்திற்கும், இரண்டாம் இடம் சேலம் மாவட்டத்திற்கும், மூன்றாம் இடம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டது. விழாவில் அதிக மாணவர்களை பங்கு பெற வைத்த வேலூர் மாவட்டத்திற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பரிசுகளை வழங்கிய பின் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு சாதாரண வெற்றி அல்ல. பல்லாயிரக்கணக்கான மாணவர்களுடன் போட்டியிட்டு உங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்கு உங்களுடைய தன்னம்பிக்கை, தைரியம், அறிவாற்றல் ஆகியவை காரணமாக உள்ளது. எனவே மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இதனை கடைபிடிக்க வேண்டும்.

வகுப்பறை, பாடம் ஆகியவற்றை தாண்டி மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் கலைத்திரணையும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஊக்கப்படுத்தி வருகிறது. பள்ளி கல்வியில் கலை மற்றும் பண்பாட்டை ஒருங்கிணைப்பதால் மாணவர்களின் சிந்தனை திறன் அதிகரிக்கும், விரிவடையும். பிற பாடங்களை கற்பதால் அவர்களின் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும்.

பள்ளி கல்வித்துறைக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு `இல்லம் தேடி கல்வி’, `நான் முதல்வன்’, `பள்ளி மேலாண்மை குழுக்கள் என்னும் எழுத்து’ என பல்வேறு திட்டங்கள் கடந்த ஒன்றரை வருடங்களில் கொண்டு வரப்படுள்ளது.

ஒரு போட்டியில் கலந்து கொண்டோம் - வெற்றி பெற்றோம் - பரிசு பெற்றோம் என்று இல்லாமல் தொடர்ச்சியாக நீங்கள் போட்டிகளில் பங்கெடுங்கள். அதேபோல படிப்பு முடிந்ததும் வேலைக்கு போய்விட்டோம் திருமணம் நடந்துவிட்டது; கை நிறைய சம்பாதிக்கிறோம் என்பதில் மட்டும் நிறைவடைந்து விடாமல் கலைத் தொண்டையும் அனைவரும் சேர்த்து அனைவரும் தொடர வேண்டும். உங்களது அறிவு, கலை அறிவாக, கல்வி அறிவாக பகுத்தறிவாக வளர வேண்டும்” என்றார்.

விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா.சுப்ரமணியன், உதயநிதி, தலைமை செயலர் இறையன்பு, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார்,  உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com