தொடரும் போராட்டம்: சிதம்பரம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மின்சாரம், குடிநீர் ’கட்’

தொடரும் போராட்டம்: சிதம்பரம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மின்சாரம், குடிநீர் ’கட்’
தொடரும் போராட்டம்: சிதம்பரம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மின்சாரம், குடிநீர் ’கட்’

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 46வது நாள் போராட்டம். விடுதிகளில் மின்சாரம் தண்ணீர் துண்டிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் 46வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 தினங்களாக காலவரையற்ற போராட்டத்தை துவக்கி உள்ளனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்து மாணவர்கள் அனைவரும் விடுதியை விட்டு வெளியேற நிர்வாகம் உத்தரவிட்டது. அதனை ஏற்க மறுத்த மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மதியம் முதல் உணவு வழங்காமல் விடுதி உணவகங்கள் மூடப்பட்டது. இரண்டாவது நாளாக மாணவர்களே உணவு ஏற்பாடு செய்து சாப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு குடிநீரும் நிறுத்தப்பட்டது. விடுதியில் மின்சாரத்தையும் குடிநீரையும் துண்டித்ததைக் கண்டித்து மருத்துவ மாணவர்கள் விடுதி வாயிலில் முன்பு குடிநீர் இல்லாத வெறும் வாளிகளை வைத்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மாணவர்களின் போராட்டத்தை முடக்கும் விதமாக மதிய உணவு கொண்டு வந்த வாகனம் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தபட்டது. இதனையடுத்து மாணவர்கள் கல்லூரி பாதுகாவலர் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அசாருதீன் என்ற முதுகலை மருத்துவ மாணவர் மயக்கமடைந்தார். இதனால் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


இதனையடுத்து பாதிக்கபட்ட மாணவருக்கு போராட்டக் களத்திலேயே சக மாணவர்கள் சிகிச்சை அளித்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான உணவு உள்ளே அனுமதிக்கபட்டது. தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com