CBSE பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த வாரியம் மத்திய கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கு சிபிஎஸ்இ முடிவு செய்தது.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒரு கல்வி ஆண்டில் இருமுறை பொதுத்தேர்வு நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முதல் பொதுத்தேர்வு ஃபிப்ரவரி மாதத்திலும், இரண்டாவது பொதுத்தேர்வு மே மாதமும் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிப்ரவரியில் நடைபெறும் தேர்விற்கான முடிவுகள் ஏப்ரலிலும், மே மாதம் நடைபெறும் தேர்வுகளின் முடிவுகள் ஜூன் மாதமும் வெளியாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் தேர்வை எழுதுவது கட்டாயம் எனவும், இரண்டாவது தேர்வை தங்கள் மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் எழுத அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அகமதிப்பீட்டு தேர்வுகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய வரைவு அறிக்கையை சிபிஎஸ்இ கடந்த பிப்ரவரியில் வெளியிட்டது.இந்நிலையில், சில மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது அதற்கு சிபிஎஸ்இ குழு ஒப்புதல் அளித்துள்ளது.