”கல்வி மறுப்புக்கு சாதியை தொடர்ந்து சட்டத்தை கையிலெடுக்கின்றனர்”- எம்.பி. திருச்சி சிவா
இந்திய மாணவர் சங்கம் நடத்தும் நீட் எதிர்ப்பு மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில் தொடங்கியது. அப்போது பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, “ஒரு காலத்தில் சாதியைக் காட்டி கல்வியை மறுத்தார்கள். இப்போது சட்டத்தைக் காட்டி கல்வியை மறுத்து வருகிறார்கள்” என்றார்.
திருச்சியில், ‘நீட் தேர்வால் மாணவர் தற்கொலை மரணங்கள் தடுக்கப்பட வேண்டும் மற்றும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்துவிடவேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தில் ஆளுநர், ஒன்றிய அமைச்சரவை, குடியரசுத் தலைவர் உடனே ஒப்புதல் வழங்க வேண்டும்’ போன்றவற்றை வலியுறுத்தி மாநாடு நடைபெற்றுவருகிறது. மாநாட்டின் தொடக்கமாக திருச்சி பெரியார் சிலையில் இருந்து பேரணியாக வந்த மாணவர்கள், நீட் தேர்வால் உயிரை மாய்த்துக் கொண்டு மாணவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமையில், சங்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் ஜி.கே.மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். உடன் நாடாளுமன்ற மதுரை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, பொது கல்விக்கான மாநில மேடை அமைப்பைச் சேர்ந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
பேரணியின்போது பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, "இந்த ஆண்டு நீட் தேர்வில் நடந்த முறைகெடுகளை பார்த்துவிட்டு, ஒரு சில மாநிலங்களை சேர்ந்தவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். ஒரு காலத்தில் சாதியைக் காட்டி கல்வியை மறுத்தார்கள். இப்போது சட்டத்தைக் காட்டி கல்வியை மறுத்துவருகிறார்கள். இதற்கு முடிவுகட்டும் அதிகாரம் மக்களிடம் இருக்கிறது. இதற்கு குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி, மாணவர்களையும், பொதுமக்களையும் அணி திரட்ட வேண்டும். இதற்கு SFI அமைப்பினர், நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடம் கருத்து பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைப் போல, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுத்து வெற்றி பெற வேண்டும்" என பேசினார்.