உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் நலனுக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனில் எப்போது போர் முடியும், எப்போது இயல்புநிலை திரும்பும் என்பது உறுதிபட தெரியாததால் தாயகம் திரும்பிய மாணவர்கள் கவலையுடன் இருப்பதாக, வழக்கு தொடர்ந்த 2 வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் மருத்துவக்கல்வி பாதிக்கப்படுவதை தடுக்க அவர்களை இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது உக்ரைனின் வெளிநாட்டு படிப்பகங்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக்கல்வியை தொடர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.