பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியளிக்கும் நடைமுறையை ரத்து செய்வதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளையும் தேர்ச்சி அடைய செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் கல்வியின் தரம் குறைந்துவிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து இந்த நடைமுறையை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
இந்நிலையில் பிரதமர் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் நடைமுறையை ரத்து செய்ய ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் சர்வதேச தரத்தில் 20 கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.