இணையவழியில் நல்லாசிரியர்களுக்கு விருதுகள்... செங்கல்பட்டில் இருந்து ஒரு புதுமையான முயற்சி
தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்களைத் தேர்ந்தெடுத்து, ஆசிரியர் தினத்தன்று இணையவழியில் சாவித்திரிபாய் புலே விருதுகளை வழங்கிக் கெளரவித்துள்ளது செங்கல்பட்டில் செயல்படும் பத்மநாபன் கல்வி அறக்கட்டளை.
விழாவில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கலைச்செல்வி, பிந்தரசி, முனைவர். சற்குணன், காந்திமதி, சரவணன், ஜெயராஜ், இளவரசு, கந்தன், உமா பாரதி, ஜெயமாலினி, உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசின் உயர்கல்வித்துறை உதவி இயக்குநர் ராஜாராமன் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
"சமூக முன்னேற்றத்திற்காக தன்னலம் கருதாமல் உழைத்துவரும் ஆசிரியர்களைக் கண்டெடுத்து மரியாதை செய்யவேண்டும் என நினைத்தோம். கொரோனா காலத்தில் அனைவரையும் ஒரே இடத்திற்கு வரவழைப்பதைவிட இணையவழியாக விருதுகளை வழங்க நினைத்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எங்களுக்கும் மகிழ்ச்சி" என்கிறார் கல்வி அறக்கட்டளைத் தலைவர் ஜெ.பிரபு.
(நன்றி தெரிவிக்கும் ஆசிரியர்)
அசத்தும் அரசுப் பள்ளி ஃபேஸ்புக் பக்கத்தில், சிறப்பாக சேவை புரிந்துவரும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் , கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் தகுதிச்சான்றிதழுடன் இணையவழியில் சிறப்பு விருந்தினர்கள் விருதுகளை வழங்கினர்.
விழாவின் இறுதியில், விருது பெற்ற ஒவ்வொரு ஆசிரியர்களும் தங்கள் கற்பித்தல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.