அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. சூரப்பா பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு பணியில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா இதற்கு முன் பஞ்சாப் மாநிலம் ரோப்பாரில் உள்ள ஐஐடியின் இயக்குநராக 2009ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார்.
உலோக பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்ற சூரப்பா, 30 ஆண்டு கல்வித்துறை அனுபவம் கொண்டவர். இதில் 24 ஆண்டுகள் ஐஐஎஸ் எனப்படும் இந்திய அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றியவர் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. 150 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ள சூரப்பா 4 காப்புரிமைகளையும் வைத்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, நியமனத்திற்கான உத்தரவை பெற்றுக் கொண்ட சூரப்பாவிற்கு ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.