தேசிய கல்விக் கொள்கை: "கல்வி அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசிப்பதே சரி" - அன்பில் மகேஷ்

தேசிய கல்விக் கொள்கை: "கல்வி அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசிப்பதே சரி" - அன்பில் மகேஷ்
தேசிய கல்விக் கொள்கை: "கல்வி அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசிப்பதே சரி" - அன்பில் மகேஷ்

புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஆனால், கல்வித்துறை அமைச்சர்களுடன் ஆலோசிப்பதே ஏற்புடையதாக இருக்கும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா தொற்றால் பள்ளி மாணாக்கர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இணையவழி கல்வி, புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் காணொலி மூலம் கலந்துரையாடுவார் என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில கல்வித்துறை அமைச்சர்களும், உயரதிகாரிகளும் கலந்து கொள்வதுதான் ஏற்புடையதாக இருக்கும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடிதம் எழுதியுள்ளார். புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நிலைப்பாடு மற்றும் கருத்துகளை தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், அரசின் நிலைப்பாட்டைத்தான் மாநில கல்வித்துறை செயலாளர் சொல்வார் என்பதால், அவர்கள் மட்டும் கலந்து கொள்வதில் தவறேதும் இல்லை என பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன், அமைச்சர்களை விட்டுவிட்டு கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு பேசுவது முறையல்ல என்றும், இதில் தமிழக அரசு சரியான நிலைப்பாடு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 10ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை நுழையவே முடியாது என கூறியிருந்தார். இந்நிலையில், மாநில கல்வித்துறை அமைச்சர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் ஆலோசிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com