”பொதுத் தேர்வுக்கு மட்டும் வந்தால் போதும்; மற்ற நாட்களில் தேவையில்லை” - அன்பில் மகேஷ்

”பொதுத் தேர்வுக்கு மட்டும் வந்தால் போதும்; மற்ற நாட்களில் தேவையில்லை” - அன்பில் மகேஷ்
”பொதுத் தேர்வுக்கு மட்டும் வந்தால் போதும்; மற்ற நாட்களில் தேவையில்லை” - அன்பில் மகேஷ்

பொதுத் தேர்வு நடைபெறும் போது தடையில்லா மின்சாரம் இருப்பதற்காக மின்சாரத் துறைக்கு துறை ரீதியான கடிதம் எழுதப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 3ஆம் ஆண்டு சார்லஸ் அப்பாதுரை கோப்பைக்கான இறுதி போட்டியை பார்த்த பின்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது எனவும், அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட இருப்பதாகவும் கூறினார். மேலும் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வருகை தேவையில்லை என்றார். மேலும் கத்தரி வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி முதல்வரின் ஆலோசனைக்கு பிறகு முடிவெடுத்துள்ளதாகக் கூறினார்.

நாளை பொது தேர்வானது நடைபெற உள்ளது.பொதுத் தேர்வு நடை பெறும்போது, தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு துறை ரீதியான கடிதம் எழுதப்பட்டுள்ளது. மாணவர்கள் மாஸ்க் அணிந்துகொண்டு தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றார். மாணவர்கள் தைரியமாக தேர்வு எழுத வேண்டும் எனவும், தேர்வு எழுத பதற்றம் அடைய தேவையில்லை எனவும் கூறினார்.

தேர்வு பயம் மற்றும் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "நான் முதல்வன்" என்ற திட்டத்தை செயல்படுத்துவதே மாணவர்கள் தங்களை செதுக்கிக்கொள்வதற்காகத்தான். மாணவர்களை செதுக்குவதற்காக ஆசிரியப் பெருமக்கள் உள்ளனர். தேர்வைக் கண்டு மாணவர்கள் பயம்கொள்ள தேவையில்லை என்றார்.

விடைத்தாள்களை கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தேர்வு மையங்களில் ஆய்வுசெய்ய 4290 பறக்கும் படையினர் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், தேர்வு வினாத்தாள் எப்படி 45 ஆண்டுகளாக எடுத்து செல்லப்பட்டதோ அதேபோல் இந்த முறையும் பாதுகாப்பாக எடுத்து செல்லப்படும் எனவும், தேர்வு எழுதிய விடைத்தாள்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் விடைத்தாள்கள் வைக்கக்கூடிய இடங்கள் மற்றும் வினாத்தாள்கள் இருக்கக்கூடிய இடங்கள் உள்ளிட்டவற்றுக்கும் திடீர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வகுப்பறையில் உடற்கல்வி வகுப்பில் மற்ற பாடங்கள் எடுக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த கல்வி ஆண்டில் பாடம் நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லாததால், உடற்கல்வி வகுப்பிலும் மற்ற பாடங்கள் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும், வரும் கல்வி ஆண்டில் உடற்கல்வி வகுப்புகள் முறையாக நடைபெறும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com