அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ழி தெரிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். அப்போது அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்றும், 47 லட்சத்தில் இருந்து 53 லட்சமாக உயர்ந்துள்ளது. 6 லட்சம் பேர் அரசு பள்ளிகளை தேடி வந்த சூழல் உருவாகியுள்ளது என்றும் கூறினார்.
குறிப்பாக இல்லம் தேடி கல்வி திட்டத்தை இன்னும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றார். மேலும், அனைவருக்கும் தேநீர் கொடுங்கள் என்றார் மார்க்ஸ்; சமமான அளவு தேநீர் கொடுங்கள் என்றார் பெரியார்; ஒரே வகையான குவளையில் தேநீர் கொடுங்கள் என்றார் அம்பேத்கர்; பசியுடன் இருப்பவர்களுக்கு முதலில் கொடுங்கள் என்றார் கலைஞர்; தேநீரையும் கோப்பையையும் இலவசமாக கொடுங்கள் என்கிறார் ஸ்டாலின் என்று கூறினார்.
தொடர்ந்து முப்பத்தி நான்கு அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதில், சிறந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது ஆண்டுதோறும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறை வாயிலாக ஆயிரம் ஆசிரியர்களுக்கு மூன்று கோடி ரூபாய் செலவில் பயிற்சி வழங்கப்படும், சென்னையில் நடைபெறும் உலக சதுரங்க விளையாட்டு போட்டிகளில் தொடர்பாக கலந்துரையாடல் ஒரு கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும், அரசு நூலகங்களில் WiFi வசதி அளிக்கப்படும், இருபத்தி மூணு லட்ச ரூபாய் செலவில் வயது வந்தோருக்கான புதிய எழுத்தறிவுத் திட்டம் கொண்டுவரப்படும், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு பள்ளிகளில் சதுரங்க போட்டிகள் நடத்தப்படும் என்பதுபோன்ற முக்கியமான திட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன.