சிபிஎஸ்இ பள்ளி பொதுத் தேர்வில் முறைகேடு புகார்

சிபிஎஸ்இ பள்ளி பொதுத் தேர்வில் முறைகேடு புகார்
சிபிஎஸ்இ பள்ளி பொதுத் தேர்வில் முறைகேடு புகார்

தமிழகத்தில் சில சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கேள்வி தாள்கள் முன்கூட்டியே வெளியிடப்படுவதாகவும், தேர்வில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. விடையை மட்டும் குறிக்கும் வகையிலான முதல் கட்ட தேர்வு டிசம்பர் மாதத்திலும், விரிவான விடை அளிக்கும் வகையிலான இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் மாதத்திலும் நடைபெறும் எனவும் புதிய தேர்வு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது நடைபெற்ற முதல் கட்ட தேர்வில் பல சிபிஎஸ்இ பள்ளிகள் குளறுபடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண் கூட்டமைப்பினர், சிபிஎஸ்இ அமைப்புக்கு 8 பக்க கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் முதல் கட்ட பொதுத் தேர்வுக்கான கேள்வித் தாள்களையும், விடைகளையும், தேர்வு நடைபெறுவதற்கு முன்பே மாணவ-மாணவிகளுக்கு சில பள்ளியின் ஆசிரியர்கள் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், விடை தெரியாத கேள்விகளுக்கு விடைத் தேர்வை ஆங்கில எழுத்தான "c" என குறிப்பிட வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு C என குறிப்பிட்டுள்ள கேள்விக்கான பதில், a, b, d என எந்த தெரிவாக இருந்தாலும் அதனை ஆசிரியர்களே மாற்றியமைத்துக் கொள்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முதல்கட்ட தேர்வில் வழங்கப்படும் மதிப்பெண்கள், இரண்டாம் கட்ட தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் இதுபோன்ற குளறுபடிகள் நடைபெறவதாக கூறப்படுகிறது.

பள்ளியை சாராத ஒரே ஒரு நபர் மட்டுமே கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவதால் எளிதில் குளறுபடிகள் நடைபெறுவதாகவும், இதனால் பல சிபிஎஸ்இ பள்ளிகளில் சுமார் 20 மாணவர்கள் வரை முழு மதிப்பெண்களை பெறுவதோடு, பள்ளியிலும் 100 சதவீத தேர்ச்சி காட்டப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே அண்மையில் நடைபெற்ற சிபிஎஸ்இ முதல்கட்ட பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அந்த பள்ளிகளின் மேலாண் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com