கட்டண விவகாரம் - அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
அனைத்து தனியார் பள்ளிகளும் 75 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டிருக்கிறது. கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது எனவும் எச்சரித்திருக்கிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள மெட்ரிக், சிபிஎஸ்இ, ICSE, IGCSE, IB பள்ளிகள் என அனைத்து தனியார் பள்ளிகளும், TUTION FEE எனப்படும் படிப்பு கட்டணத் தொகையில் 75 சதவீதத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். சீருடை, பேருந்து கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களை செலுத்த வற்புறுத்தக் கூடாது.
கட்டணம் செலுத்தாத மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது எனவும், அவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது. பதினோறாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சமூக நீதியுடன் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும்” என தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.
தனியார் பள்ளிகள் அனைத்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வராத வண்ணம் செயல்பட வேண்டும் எனவும் பள்ளிகல்வித் துறை அறிவுறுத்தியிருக்கிறது.