தமிழ் உட்பட 7 பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வி... சாதக, பாதகங்கள் என்ன? - ஓர் அலசல்

தமிழ் உட்பட 7 பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வி... சாதக, பாதகங்கள் என்ன? - ஓர் அலசல்
தமிழ் உட்பட 7 பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வி... சாதக, பாதகங்கள் என்ன? - ஓர் அலசல்

வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ் உட்பட ஏழு பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வி பாடத்திட்டம் அமைய உள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) தெரிவித்துள்ளது. இதற்கான அனுமதியை பெற கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே கல்வியை தாய் மொழியில் கற்பது சிறப்பான புரிதலை கொடுக்கும் என வல்லுனர்கள் பலர் சொல்வதுண்டு. அந்தவகையில் பொறியியல் கல்வி இளநிலை பாடத்திட்டத்தை இனி மாணவர்கள் தமிழில் கற்கலாம். 

முன்னோட்டம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், குஜாராத்தி மற்றும் மராத்தி ஆகிய ஏழு பிராந்திய மொழிகளில் இளநிலை பொறியியல் கல்விக்கான பாடத்திட்டங்கள் தயாராக உள்ளதாக AICTE தெரிவித்துள்ளது. இது தவிர மேலும் 11 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்களை மொழிபெயர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. பிராந்திய மொழிகளில் பாடம் கற்கவும், கற்பிக்கவும் கட்டாயம் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்மொழியில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் தொழிற்கல்வி குறித்த தெளிவான புரிதலை பெற இந்த முயற்சி பெரிதும் கைகொடுக்கும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். 

தமிழகத்தில் கடந்த 2011 முதலே அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சில அரசு பொறியியல் கல்லூரிகளில் சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் கல்விக்கான பாடத்திட்டங்கள் தமிழில் பயிற்றுவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தாய்மொழி வழி பொறியியல் கல்வியில் ஏதேனும் நடைமுறை சிக்கல் உள்ளதா?

மாறன் - கல்வியாளர்

“தமிழில் பொறியியல் கல்வியின் பாடத்திட்டம் வரவேற்கத்தக்க ஒன்று. ஏற்கனவே தமிழகத்தில் தமிழ் வழியில் பொறியியல் கல்வி கற்பிக்கப்பட்டு வரும் சூழலில் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் தமிழ்வழி பொறியியல் கல்வியை அணுக வேண்டி உள்ளது. ஏனெனில் பொறியியல் பயின்ற 100 மாணவர்களில் 20 சதகவிகத்தினருக்கு தான் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கிறது. அதனால் இதனை மிகவும் கவனத்துடன் கையாண்டால் தமிழ் வழியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு எட்டுகின்ற கனியாக இருக்கும். குறிப்பாக வேலைவாய்ப்பில் அரசு தமிழ் வழியில் பொறியியல் பயின்ற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மாதிரியான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதே போல சீனா, ஜப்பான் மாதிரியான நாடுகளில் தாய்மொழியில் தான் பொறியியல் பயில்கின்றனர். அதனால் மாணவர்கள் அங்கு ஆய்வு பணிகளை மிக புரிதலோடு அணுகுகின்றனர். அதையெல்லாம் வைத்து பார்த்தால் இந்த முயற்சி வரவேற்க தகுந்தது. குறிப்பாக இந்த முயற்சியை குறிப்பிட்ட முன்னணி பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே இப்போதைக்கு வழங்க வேண்டும். அதன் மூலம் அந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தலாம்” என தெரிவித்துள்ளார். 

தமிழ் வழியில் பொறியியல் கல்வி பயில்வதானல் வேலைவாய்ப்பில் சிக்கல் ஏற்படுகிறதா?

லதா பாண்டியராஜன் - மனிதவள மேம்பாட்டுத்துறை

“இன்றைய சூழலை வைத்து பார்த்தோம் என்றால் தமிழ் வழியில் பொறியியல் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் சிக்கல் உள்ளது என்பதை சொல்லியாக வேண்டும். ஆனால் இதனை தொலைநோக்கு பார்வையுடன் பார்த்தாக வேண்டும். ஏனெனில் ஒரு பணிக்காக பொறியியல் கல்வி பயின்றவர்கள் நேர்காணல் செய்யும் போது அவர்களது டெக்னிக்கல் ஸ்கில்லுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் வழியில் ஒரு மாணவன் பொறியியல் கல்வியை பயின்றால் அவனுக்கு இந்த டெக்னிக்கல் சமாச்சாரம் கைவந்த கலையாக இருக்கும். அதனால் வேலைவாய்ப்பில் முக்கியத்துவமும் கிடைக்கும். குறிப்பாக தகவல் தொழிநுட்ப துறையில் பயில தான் மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்” என தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு முதலே தாய் வழி மூலம் பொறியியல் கல்வியை போதிக்க தகுதி வாய்ந்த பேராசிரியர்களை தேர்ந்தெடுக்கும் பணியை AICTE மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வரும் கல்வியாண்டு முதல் இதனை நடைமுறையில் சாத்தியப்படுத்த எந்த சிக்கலும் இருக்காது என கல்வி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

தொகுப்பு : எல்லுச்சாமி கார்த்திக் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com