Digital Education
Digital EducationDigital Education

டிஜிட்டல் கல்வியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை எப்படி? - ஒரு பார்வை

டிஜிட்டல் கல்வியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை எப்படி? - ஒரு பார்வை
Published on

கொரோனா பேரிடர் காலத்தில் பள்ளிக் கல்வித்துறையில் டிஜிட்டலின் பங்களிப்பு அத்தியாவசியமாகிவிட்ட சூழலில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் டிஜிட்டல் செயல்பாடுகள், தேசிய அளவில் முன்னோக்கி இருப்பது மத்திய அரசின் புதிய தரவுகளின் மூலம் தெரிய வருகிறது.

டிஜிட்டல் வழிக் கல்வியில் தமது முன்னெடுப்புகள் குறித்து விளக்கம் அளிக்கும் மத்திய அரசு, "இந்தியாவில் அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதற்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 (RTE)-ன் படி, 6 முதல் 14 வயதுக் குழந்தைகளுக்கு அருகில் உள்ள பள்ளியில் இலவச மற்றும் கட்டாய கல்வியை, சம்பந்தப்பட்ட அரசுகள் வழங்குவதை உறுதி செய்கிறது.

கோவிட் பெருந்தொற்று காலத்திலும், குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதற்காக, மத்திய கல்வி அமைச்சகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டன. குறிப்பாக, டிஜிட்டல் முறையில் ஆன்லைன் கல்வி, டி.வி மற்றும் ரேடியோ மூலம் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதற்காக பிரதமரின் இ-வித்யா நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதுமட்டுமின்றி, திக்‌ஷா (ஆன்லைன்), ஸ்வயம் (ஆன்லைன்), ஸ்வயம் பிரபா (டி.வி), தூர்தர்ஷனின் இதர சேனல்கள், அகில இந்திய ரேடியோ நெட்வொர்க்குகள் மூலம் அனைவருக்கும் கல்வி கொடுக்கப்பட்டது. மேலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கல்வியைத் தொடர்ந்து வழங்குவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய பிரக்யதா வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இணைய இணைப்பு இல்லாதவர்களுக்காக, டி.வி, ரேடியோ மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றலுக்கு தீர்வு காண மாற்றுக் கல்வி அட்டவணை உருவாக்கப்பட்டது.

 சமுதாய ரேடியோ, நோட்டு - புத்தகங்களை மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்குதல், மாணவர்களின் வீட்டுக்கு ஆசிரியர்கள் செல்லுதல், சமுதாய வகுப்பறைகள், இலவச போன் எண்கள், எஸ்.எம்.எஸ் மூலம் வேண்டுகோள் விடுத்து ஆடியோ மூலம் கல்வியைப் பெறுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசின் சார்பில் எடுக்கப்பட்டன" என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.

இதனிடையே, மாணவர்களின் கல்விக்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எடுத்த நடவடிக்கைகளும், பங்களிப்பு தொடர்பாகவும் 'இந்திய டிஜிட்டல் கல்வி - ஜூன் 2020' என்ற ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வியை ஊக்குவிக்க அதிகளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. குறிப்பாக, சிக்‌ஷா வாணி மூலம் ரேடியோ, சமுதாய ரேடியா, சிபிஎஸ்இ பாடங்களின் ஆடியோ பதிவிறக்கம் போன்றவை மாநிலங்களிடையே அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையில் ‘பார்வையற்ற மற்றும் காதுகேளாத மாணவர்களுக்காக NIOS இணையதளம் / யூடியூப்-ல் சிறப்பு இ-பாடங்கள் மற்றும் சைகை மொழிப் பாடங்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. கல்லூரிகளில் ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், யுஜிசி-யும் தேவையான ஒழுங்குமுறைகளை அறிவித்தது. இதன் மூலம் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தின. அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தரமான கல்வியை உறுதி செய்ய ஸ்வயம், ஸ்வயம் பிரபா, தேசிய டிஜிட்டல் நூலகம் (NDL), மெய் நிகர் ஆய்வுக் கூடம், இ-யந்த்ரா, தொழில்நுட்பத்துக்கான தேசிய கல்வி கூட்டணி, கல்விக்கான திறந்தவெளி மென்பொருள் போன்ற பலவிதமான டிஜிட்டல் நடவடிக்கைகளையும் மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்டது.

இதன்படி, இந்திய மாநிலங்களில், டிஜிட்டல் கல்வியின் அடிப்படையில், ஹிமாச்சலப் பிரதேசமும், மேகாலயா மாநிலமும் முதல் இடத்தில் உள்ளது. டிஜிட்டல் கல்விக்கு எடுக்கப்பட்ட 16 நடவடிக்கைகளிலும் இரண்டு மாநிலங்களில் முழுமையாகப் பங்காற்றியுள்ளன. மூன்றாவது இடத்தில் குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்கள் 16 நடவடிக்கைகளில் 15 நடவடிக்கைகளில் முழு ஈடுபாட்டைக் கொடுத்துள்ளன. இந்த பட்டியலில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில், கல்வி வானொலி சேனல் மட்டும் இல்லை.

அதைத் தவிர்த்து, டிஜிட்டல் வகுப்பறை, ஐ.சி.டி ஆய்வகம், ஆன்லைன் மாணவர் சேர்க்கை, இ-கன்டென்ட் களஞ்சியம், இ-புத்தகங்கள், ஆஃப்லைன் புத்தகங்கள், இன்டராக்டிவ்  ரிசோர்சஸ் - ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, கல்வி வானொலி சேனல், வெப் டிவி சேனல்கள், இணையவழி கற்றல் தளம், கணினிவழி கற்றல், மொபைல் செயலி, சிவில் சொசைட்டி பார்ட்னர்ஷிப், போட்டித் தேர்வுகளுக்கான டிஜிட்டல் முன்முயற்சிகள் மற்றும் மற்ற முன்முயற்சிகளில் சிறப்பாக ஈடுபாடு கொடுத்துள்ளது தமிழ்நாடு’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய அறிக்கையில், டிஜிட்டல் கல்வியில் தமிழ்நாடு எடுத்துள்ள முக்கிய சிறப்புகளை எடுத்துக் கொண்டால், இணையவழி கற்றலில், இணையவழி கற்றல் தொடர்பான 10,000 கன்டென்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் டிஜிட்டல் முறையில் 390 பாடபுத்தகங்களும், இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஒருங்கிணைந்த யூடியூப் வீடியோக்களையும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளன என்பதும்; டி.என்.டி.பி (Tamil Nadu Teachers Platform)-ல் 10,000 மின் கற்றல் பொருளடக்கமும், 390 டிஜிட்டல் பாடப்புத்தகங்களும், 980-க்கும் அதிகமான இன்ட்ராக்டிவ் க்விஸ்களும், 2,000+ ஒருங்கிணைந்த யூ-டியூப் வீடியோக்களும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளன என்பதும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், TN SCERT சேனல் மூலம் 3,390க்கும் அதிகமான யூ-டியூப் வீடியோக்கள் வழங்கப்பட்டு டிஜிட்டல் கல்வி வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்காற்றியுள்ளது.

அறிக்கையின்படி டிஜிட்டல் கல்வியில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் சிறப்பாகப் பங்காற்றினாலும் மிசோரம், திரிபுரா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com