வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை தேவை - ஓபிஎஸ்
வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக ஆட்சி அமையும்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும். பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும், இது உறுதி. 8 மாதங்கள் பொறுத்திருங்கள், விடியல் பிறக்கும் என்று சட்டமன்ற தேர்தலுக்கு முன் கூறியவர் தான் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
2010-ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோதே, மத்திய காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டிருந்தால் இன்று 'நீட்' என்ற பிரச்சனையே வந்திருக்காது. நீட் ரத்து மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு, திமுக அரசின் மெத்தனப் போக்கே காரணம். நீட் ரத்துக்கு தேவையான சரியான தரவுகள் மற்றும் கருத்துகளை ஆளுநரிடம் எடுத்துரைக்காததே அவர் திருப்பி அனுப்பியதற்கு காரணம்.
வரும் கல்வியாண்டிற்கு 3 மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், நீட் தேர்வின் நிலைப்பாடு புரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, நீட் தேர்வை ரத்து செய்ய அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.