மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியை: கொரோனா காலத்தில் நெகிழ வைத்த சேவை
ஊரடங்கு காரணத்தினால் அனைத்து தனியார் பள்ளிகளில், இணையவழிக் கல்வி நடைபெற்று வரும் நிலையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் அவரது வீடுகளுக்குச் சென்று கல்வி புகட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
கூடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டுப் பகுதியில் உள்ள பண்ருட்டி அரசு மேல்நிலையில் பணியாற்றி வரும் ஆசிரியை வி.மகாலட்சுமி (49). இவர் கடந்த ஒரு மாத காலமாக அப்பள்ளியில் படித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வில்லுப்பாட்டு மற்றும் யூடியூப் வீடியோக்களின் வழியாக கல்விச் சேவை அளித்து வருகிறார். இதற்காக பிரேத்யமாக வாட்ஸ் ஆப் குரூப்பை உருவாகியுள்ள இவர், இதன் மூலம் கல்விச் சார்ந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் இந்த வேளையில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மனச் சோர்வு அடையக்கூடாது. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வழியாக கல்விக் கற்பிக்கப்பட்டு இந்தச் சூழலில், ஸ்மார்ட் போன் வசதி இல்லாத அரசுப் பள்ளி ஏழை மாணவர்கள் அவர்களுக்கான கல்வியைப் பெற முடியாதச் சூழல் நிலவுகிறது.மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்விக் கற்கும் போது பெற்றோர்கள் அவர்கள் இருக்கும் பகுதியில் வீட்டு வேலைகளைச் செய்யாமல் இருக்க வேண்டும். காரணம் இது அவர்களுக்கு கல்வி ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.ஸ்மார்ட் போன் வசதி இல்லாதவர்கள் அருகில் ஸ்மார்ட் போன் வசதிகொண்ட மாணவர்களின் உதவியை நாடி கல்வி கற்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக கல்வி கற்க வாய்ப்பு இருக்கும் இந்த வேளையில், அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் மீது நாம் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அப்படி நாம் கவனம் செலுத்தும் பட்சத்தில் அவர்கள் நல்ல மாணவர்களாக உருவெடுப்பார்கள் என்று கூறிய இவர் ஏழை குடும்பத்தில் பிறந்த நான் அனைத்து சிரமங்களை கடந்தே இப்பணிக்கு வந்தேன் என்றும் தெரிவித்தார்.