வீட்டில் இருந்துகொண்டே வேலை செய்வதில் என்னா சுகம்... WFH-ஐ இன்னும் விரும்பும் தொழிலாளர்கள்

வீட்டில் இருந்துகொண்டே வேலை செய்வதில் என்னா சுகம்... WFH-ஐ இன்னும் விரும்பும் தொழிலாளர்கள்
வீட்டில் இருந்துகொண்டே வேலை செய்வதில் என்னா சுகம்... WFH-ஐ இன்னும் விரும்பும் தொழிலாளர்கள்

புதிய கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் நெருக்கடி முடிந்தபிறகும் வழக்கமான ஊழியர்களில் 74 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே வேலையைத் தொடர விரும்புகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

வருங்கால நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கு நிறுவனங்களுக்கு உதவக்கூடிய தொழில்துறை அமைப்பான, இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (அசோசாம்) மேற்கொண்ட சுவாரஸ்யமான கணக்கெடுப்பு அறிக்கையில், தற்போது வீட்டிலிருந்து பணிபுரியும் பெரும்பாலான “வொர்க் ஃப்ரம் ஹோம்” ஊழியர்கள், கொரோனோ நெருக்கடி முடிந்த பின்பும் தொடர்ந்து அவ்வாறே வேலை செய்ய விரும்புவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில், அதாவது டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் இந்த கணக்கெடுப்பினை நடத்தினார்கள். அதன்படி, வழக்கமான ஊழியர்களில் 74 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் நெருக்கடி முடிந்தபிறகும் வீட்டிலிருந்தே வேலையைத் தொடர விரும்புகிறார்கள்.

பொதுப்போக்குவரத்தில் நம்பிக்கை இல்லாததே இதற்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும். ஏறக்குறைய அனைத்து மாநிலங்களும் பொதுப்பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் சேவைகளை மீண்டும் தொடக்கியிருந்தாலும், மக்கள் அவற்றைப் பயன்படுத்துவதில் அச்சம் கொண்டுள்ளனர். பதிலளித்தவர்களில் 73 சதவீதம் பேர் தங்கள் சொந்த வாகனத்தைப் பயன்படுத்துவதாகக் கூறியதாகவும், 21 சதவீதம் பேர் மட்டுமே பொதுப் போக்குவரத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.

வொர்க் ஃப்ரம் ஹோம் நிலைமை ஊழியர்களுக்கு மட்டுமல்ல, நிறுவனங்களுக்கும் பயனளித்துள்ளது. போக்குவரத்து மற்றும் அலுவலக இட வாடகை போன்ற செயல்பாட்டு செலவுகள் குறைவதால், ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பதில் நிறுவனங்களுக்கும் சாதகமான அம்சங்கள் உள்ளன என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com