தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு..? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான பாதுகாப்புக் குறித்து ஆய்வு நடத்துமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ரியான் சர்வதேசப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்த பிரதியுமான் என்ற 7 வயது சிறுவன் பள்ளி கழிப்பறையில் மர்மமான முறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். சிறுவனை பாலியல் தொந்தரவு செய்து கொன்றதாக டிரைவர் அசோக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவன் கொலை செய்யப்பட்டது பெற்றோர்கள், உறவினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பெற்றோர், உறவினர்கள், மற்றும் இதர மாணவர்களின் பெற்றோரும் பள்ளி வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்று சில வழக்கறிஞர்கள் வாதிட்டனர். மேலும், நீதிபதிகள் தாமாக முன் வந்து தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் அரியானா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.