தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றுமுதல் தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வுகள்

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றுமுதல் தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வுகள்
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றுமுதல் தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வுகள்
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று மார்ச் 13 ஆம் தேதி தொடங்குகிறது. இதேபோன்று நாளை மார்ச் 14 ஆம் தேதி பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்குகிறது.
பிளஸ் 2
பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் 8,36,593 மாணவ, மாணவிகளும், புதுச்சேரி மாநிலத்தில் 14710 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் 4,03,156 மாணவர்கள் மற்றும் 433,436 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்வு எழுத உள்ளனர். தனித் தேர்வர்கள் 23,747 பேர் எழுத உள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 5,206 பேர் எழுத உள்ளனர். சிறைகளில் உள்ள 90 சிறைவாசிகள் தேர்வு எழுத உள்ளனர். 
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 3185 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் 40 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்தும் பணியில் 46,870 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுகின்றனர். தேர்வு முறையாக நடைபெறுவதை கண்காணிக்க 3,100 பறக்கும் படைகள், 1135 நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 281 இடங்களில் வினாத்தாள் மையங்கள் போலீஸார் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 1
அதேபோன்று பிளஸ் 1 பொதுத்தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7,88,064 மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் 3,60,908 மாணவர்கள் மற்றும் 4,12,779 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்வு எழுத உள்ளனர். தனித் தேர்வர்கள் 5,338 பேர் எழுத உள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 5,835 பேர் எழுத உள்ளனர். சிறைகளில் உள்ள 125 சிறைவாசிகள் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கு 3,224 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 3184 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் 40 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 1 பொதுத் தேர்வு நடத்தும் பணியில் 43,200 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுகின்றனர். தேர்வு முறையாக நடைபெறுவதை கண்காணிக்க 3100 பறக்கும் படைகள், 1134 நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 281 இடங்களில் வினாத்தாள் மையங்கள் போலீஸார் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளன.
மற்ற ஏற்பாடுகள்
மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ எழுதுவோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொழிப் பாடங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் குடிநீர், கழிப்பிட வசதிகள், காற்றோட்டம், வெளிச்சம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட எஸ்பி, சார் ஆட்சியர்கள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய மாவட்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் பொதுத்தேர்வு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செல்போனுக்கு தடை
தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு அறைக்குள் அறை கண்காணிப்பாளர்கள் செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கீனமாக நடந்தால் தண்டனை
தேர்வு மையத்தில் துண்டு சீட்டு வைத்திருத்தல், துண்டு சீட்டு பார்த்து எழுதுதல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல் குற்றமாக கருதப்படும். ஒழுங்கீனமான செயலுக்கு பள்ளி நிர்வாகம் உதவுவது ஊக்கப்படுத்தும் வகையில் இருந்தால் பள்ளி தேர்வு மையம் ரத்து செய்யப்படும். பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com