+2 தேர்வு - சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை
+2 தேர்வை நடத்துவா? ரத்து செய்வதா? என்பது குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்திவருகிறார்.
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து குஜராத், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் +2 பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. இந்தச் சூழலில் தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதில் அதிமுக சார்பில் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் பங்கேற்றுள்ளார். பங்கேற்றுள்ள 13 கட்சிகளின் நிர்வாகிகளில் 11 பேர் தேர்வை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். +2 பொதுத்தேர்வு நடத்தாவிட்டால் எதனடிப்படையில் உயர்க்கல்வி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.
கருத்துக்கேட்பிலும் 60% பேர் தேர்வை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையையே முன்வைத்துள்ளனர். இதன்படி, தேர்வு நடத்தப்பட்டால் மொழிப்பாடங்கள் தவிர்த்து முக்கிய பாடங்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்றும், மேலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டு தேர்வில் கேள்விகள் மற்றும் தேர்வு நேரம் குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.