David Warner
David WarnerFile Image

“ஜனவரி மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு” - திடீரென அறிவித்த டேவிட் வார்னர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்காக தயாராகி வரும் டேவிட் வார்னர், தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், கடந்த 2011 முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை 103 டெஸ்டில் விளையாடி 25 சதம் உள்பட 8,158 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த நிலையில் 36 வயதான டேவிட் வார்னர், அடுத்த ஆண்டு (2024) ஜனவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டேவிட் வார்னர் அளித்த பேட்டியில், “2024-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிதான் நான் விளையாடப்போகும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன். எனது திட்டமும் அது தான்.

டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், அடுத்த ஆண்டு (2024) ஜனவரியில் சொந்த ஊரான சிட்னியில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் உடன் விடைபெற விரும்புகிறேன். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் போட்டி ஆகிய டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகரமாக சாதிக்கும் பட்சத்தில், அடுத்து வரும் பாகிஸ்தான் தொடருடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன்.

David Warner
David Warner

இங்கு தொடர்ச்சியாக ரன் குவித்து, அதன் பிறகு ஆஸ்திரேலியாவிலும் தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் கூட பாகிஸ்தான் தொடருக்கு அடுத்ததாக நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் நிச்சயம் விளையாடமாட்டேன். அதன் பிறகு வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துவேன்.

ஒவ்வொரு போட்டியில் ஆடும் போதும், இது தான் நமது கடைசி போட்டி என்ற சிந்தனையில்தான் விளையாடுவேன். அதுதான் எனது கிரிக்கெட் ஸ்டைல். இப்போதுள்ள என் அணியினருடன் அங்கம் வகிப்பதை மிகவும் விரும்புகிறேன். அவர்களுடன் உற்சாகமாக விளையாடுகிறேன். தொடர்ந்து கடினமாக உழைக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஷஸ், ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என்று அடுத்து முக்கியமான போட்டிகள் வருகின்றன. அதற்கு என்னை தயார்படுத்தி வருகிறேன்” என்றார்.

David Warner
David Warner

2022 டிசம்பரில் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) விளையாடிய டேவிட் வார்னர், இரட்டை சதம் விளாசினார். 2020 ஜனவரிக்குப் பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிவரும் வார்னர் அடுத்து வரும் போட்டிகளில் ஜொலித்தால் தான் தொடர்ந்து வாய்ப்பு பெற முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com