மதுரை: கொலைவழக்கில் ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் படுகொலை - முன்பகை காரணமா?
மதுரை அலங்காநல்லூர் அருகே முன் பகை காரணமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் அய்யனகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ஜெயசூர்யா (22). இவர் அலங்காநல்லூர் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து தலை, மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் சராமரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது.
இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய ஜெயசூர்யாவை மீட்டு அப்பகுதி மக்கள் அந்த வழியாக வந்த தீயணைப்புத்துறை வாகனத்தில் ஏற்றி அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் முன் பகை காரணமாக ஜெயசூர்யா வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் இறந்த ஜெயசூர்யா மீது ஏற்கனவே சில கொலை வழக்கு உள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், கொலைவழக்கில் ஜாமின் பெற்று வெளியூரில் தலைமறைவாக இருந்த ஜெயசூர்யா தற்போது தனது சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.