மண்ணச்சநல்லூர் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை அடித்து கொலை செய்த தந்தை மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பஞ்சலி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் கதிரேசன் (வயது 22).
ஆட்டோ ஓட்டுனரான கதிரேசன் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவரது தோட்டத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாய்களை கடந்த சில மாதங்களுக்கு முன் உடைத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு தங்கராசு தோட்டத்தில் இருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் குழாய்கள் மீண்டும் உடைக்கப்பட்டது. சனிக்கிழமை காலை தோட்டத்திற்கு சென்ற தங்கரசு பிளாஸ்டிக் குழாய் மீண்டும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு ஆத்திரமடைந்தார். வீட்டிற்கு வந்த தங்கரசு தனது மகன்கள் பாஸ்கர், சுரேஷ் ஆகியோருடன் கதிரேசன் வீட்டிற்கு சென்று கதிரேசனை தேடியுள்ளனர். ஆனால் கதிரேசன் வீட்டில் இல்லையென அவரது மனைவி கூறியுள்ளார்.
வீட்டில் இருந்து வெளியே வந்த அவர்கள், கடை வீதி பகுதியில் நடந்து வந்த கதிரேசனை கண்டு ஆத்திரத்துடன் தாக்கியுள்ளனர். அப்போது அங்கே வந்த கதிரேசன் மனைவி நந்தினியையும் கடுமையாக அவர்கள் தாக்கியுள்ளனர். பின்னர் கதிரேசனின் கையை கயிற்றால் கட்டி மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்வதாக அழைத்து சென்றனர். ஆனால் மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு கதிரேசன் உறவினர்கள் சென்று பார்த்த போது அங்கு கதிரேசன் இல்லை. இதனையடுத்து போலீஸார் தங்கராசு அவரது மகன்கள் சுரேஷ், பாஸ்கர் ஆகிய மூவரையும் பிடித்து விசாரணை செய்த போது, கதிரேசனை கயிற்றால் கட்டி தோட்டத்திற்கு கொண்டு சென்று முகம் மற்றும் தலையில் அடித்து கொலை செய்து விட்டு சடலத்தை தனது தோட்டத்திலே வீசி விட்டு வீட்டிற்கு வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.