மதுபோதையில் கோயில் சிலைகளை உடைத்த இளைஞர்கள் (வீடியோ)
மதுராந்தகம் அருகே மது போதையில் கோயிலில் உள்ள சிலையை இளைஞர்கள் உடைத்த வீடியோ வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கொங்கரை கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ளது எல்லையம்மன் கோயில். இக்கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு மதுகுடிக்க வந்த வாலிபர்கள் மூன்றுபேர் மது அருந்திவிட்டு கோயில் வளாகத்தில் உள்ள சாமி சிலைகளை உடைத்து செருப்பு கால்களால் உதைத்து மதுபோதையில் வெறியாட்டம் ஆடியுள்ளனர். பின்னர் வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் அவர்கள் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் நேற்று கோயில் அருகே உள்ள நீர் வற்றிய கிணற்றில் கைபேசி இருந்ததை அப்பகுதி மக்கள் எடுத்து பார்த்தபோது, அதில் சாமி சிலைகளை உடைக்கும் காட்சிகள் இருந்தது. இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ந்துபோயினர் பின்னர் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீடியோவில் உள்ள இளைஞர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சர்ச்சைக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.