7 வயது சிறுமியை எரித்துக்கொல்ல முயற்சி.. விசாரணையில் சிறுமி கொடுத்த பகீர் வாக்குமூலம்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே 7 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து எரித்துக்கொல்ல முயன்ற நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்னமனூர் அருகே, அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 3-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, அங்கன்வாடி மையத்தில் சத்துணவு பணியாளராக வேலை பார்க்கும் பாட்டியுடன் தங்கியுள்ளார். இவரது தாய் வேறொரு திருமணம் செய்துகொண்டு குழந்தையை விட்டு செல்ல, தந்தையும் இவரை பிரிந்து சென்றிருக்கிறார்.
கடந்த சனிக்கிழமையன்று பாட்டியுடன் அங்கன்வாடி சென்றிருக்கிறார் சிறுமி. அங்கு சிறுமியின் பாட்டி வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, உடையில் திடீரென தீப்பற்றிய நிலையில் ஓடிவந்திருக்கிறார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீ அணைக்கப்பட்ட நிலையில், சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டார்.
45 சதவிகித தீக்காயங்களுடன் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விசாரணையில், சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை காவல்துறையிடம் விவரித்துள்ளார். அதன்படி எரசக்கநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற 20 வயது இளைஞர், சிறுமியை விளையாட அழைத்துச் செல்வதாகக் கூறி, பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.
அச்சத்தில் அலறிய சிறுமியை அமைதியாக்கவும், நடந்ததை வெளியே சொல்லிவிடாமல் தடுப்பதற்காகவும் ஆடையில் தீவைத்துவிட்டு அந்த இளைஞர் தப்பியோடியிருக்கிறார். இதுதொடர்பாக சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விஜயகுமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டார்.
- செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்