திருச்சி: 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞர்; 7 பேர் கைது
திருச்சி மாவட்டம் அருகே 16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். உடந்தையாக இருந்த 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துறையூர் அருகே மேட்டு சொரத்தூரைச் சேர்ந்த ஒருவர் தனது 16 வயது மகளை டிச. 7ம் தேதி முதல் காணவில்லை என துறையூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் முசிறி டிஎஸ்பி பிரம்மானந்தம் தலைமையில் துறையூர் காவல்ஆய்வாளர் விதுன் குமார், எஸ்ஐ திருப்பதி போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் துறையூர் பெரியார் நகரைச் சேர்ந்த ரெங்கநாதன் மகன் ராஜேஷ் என்பவர் அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதும் சென்னையில் திருமணம் செய்துகொண்டு நண்பர் உதவியுடன் வசித்துவருவதும், ஓட்டலில் கூலி வேலை செய்துவந்ததும் தெரிய வந்தது.
அதன்பின்னர் சென்னையிலிருந்து ராஜேஷையும் சிறுமியையும் துறையூர் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர்.
விசாரணையில் ராஜேஷ் தனது தந்தை ரெங்கநாதன், தாய் உமா, நண்பர்களான வடக்குத் தெருவைச் சேர்ந்த திலகராஜ் மகன் ராஜா, துரைசாமி மகன் கருப்புசாமி, துறையூர் முத்துநகரைச் சேர்ந்த நடராஜன் மகன் தினேஷ், பெரியார் நகரைச் சேர்ந்த வையாபுரி மகன் தமிழரசன், தென்காசி அருகே வெள்ளக்குளத்தைச் சேர்ந்த அழகப்பன் மகன் அமுல்ராஜ் ஆகியோர் உதவியுடன் சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.
இதையடுத்து துறையூர் போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து ராஜேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த 7 பேரையும் கைது செய்து வழக்கு பதிவுசெய்ததுடன், திருச்சி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.