நாகை: 78 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞர் - சத்தமிட்டதால் கொலை செய்த கொடூரம்!

நாகை அருகே நள்ளிரவில் 78 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை தனிப்படை போலீசார் கைதுசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெங்கடேஷ்
வெங்கடேஷ் File image

நாகை செக்கடி தெருவை சேர்ந்த சிங்காரம் என்பவரது மனைவி சீதா (வயது 78). இவர்களுக்கு 3 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமகி பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். சீதா மட்டும் செக்கடி தெருவில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி நள்ளிரவு நேரத்தில் சீதா காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சல் போட்டுள்ளார். இதை கேட்ட அருகில் இருந்தவர்கள் எழுந்து மூதாட்டியின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது சீதா வீட்டிலிருந்து 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் முகத்தை துணியால் மூடிக்கொண்டு தப்பியோடியுள்ளார் . இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது மூதாட்டி சீதா இறந்து கிடந்துள்ளார்.

மூதாட்டி சீதா
மூதாட்டி சீதா

இச்சம்பவம் குறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்சிங் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இது தொடர்பாக டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் அதே தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் பெயிண்டரான வெங்கடேசனை (37) சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்துவிசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

சம்பவத்தன்று மது போதையில் இருந்த வெங்கடேஷ் வீட்டில் தனியாக படுத்திருந்த மூதாட்டி சீதாவை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது தூக்கத்திலிருந்து எழுந்த மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து வெங்கடேஷ், மூதாட்டி சீதாவின் வாயில் துணியை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு, தனக்கு ஒன்றும் தெரியாது போல இருந்துள்ளார்

இதைத்தொடர்ந்து வெங்கடேசை பிடித்து நடத்திய விசாரணையில் மூதாட்டி சீதாவை கொலை செய்ததை ஓப்புக்கொண்டுள்ளார்.பின்னர் அவரை தனிப்படை போலீசார் கைது வெங்கடேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் வெங்கடேசுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாகையில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com