35 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய 24 வயது இளைஞர் கைது
மணப்பாறை அருகே மாற்றுத்திறனாளி பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததோடு நகை மற்றம் பணத்தை பறித்த இளைஞரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் தெத்தூரைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் சுமதி (35). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகாத நிலையில், தனது பாட்டி வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் விஜயகுமார் (24) என்பவருக்கும் எடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவ்வப்போது திருமணம் செய்து கொள்வதாக காதல் ஆசை வார்த்தைகளை கூறி விஜயகுமார் சுமதியிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு, பின் அவரிடமிருந்து சிறு சிறு நகைகளையும், பணத்தை பெற்று வந்துள்ளார். இதுவரை மூன்றரை சவரன் நகைகளையும், சுமார் ரூ.2 லட்சம் ரொக்கத்தையும் விஜயகுமார் பெற்றுள்ளதாக தெரிகிறது (புகாரின்படி).
இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சுமதி கேட்டதற்கு தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து சுமதியை தகாத வார்த்தைக் கூறி அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் மத்தியில் சமரசம் பேசியும் விஜயகுமார் அதற்கு ஒப்புக் கொள்ளாததால், இதுகுறித்து சுமதி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் பெண் மீதான பாலியல் வன்கொடுமை, நகை – பணம் ஏமாற்றியது என வழக்குப் பதிவு செய்துள்ள மகளிர் போலீசார், விஜயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர்.