குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக நினைத்து தொடர் கொள்ளை - விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்!

குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக நினைத்து தொடர் கொள்ளை - விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்!
குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக நினைத்து தொடர் கொள்ளை - விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்!

கடந்த 3 மாதங்களில் 11 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கன்னியாகுமரி மாவட்டத்தை அதிரவைத்த இரு கொள்ளையர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை செய்யப்பட்டபோது, ஏழை என்பதால் தன்னைவிட்டு பிரிந்துசென்ற முன்னாள் காதலியின் முன் கோடீஸ்வரனாக வாழ்ந்து காட்டவேண்டுமென நினைத்து தான் கொள்ளையனாக மாறியதாக அவரே தெரித்திருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட குளச்சல், கருங்கல், நித்திரவிளை, வெள்ளிச்சந்தை, கொல்லங்கோடு பகுதிகளில் கழிந்த 2021-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் ஏ.டிஎம். கொள்ளை, விலையுயர்ந்த செல்போன்கள் திருட்டு நகை கொள்ளை என 11-கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. கொள்ளை சம்பவங்கள் அரங்கேறிய பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, அனைத்து சம்பவங்களிலும் ஜோக்கர் முகமூடி, குல்லா, மற்றும் குடைகளுடன் மாறு வேடத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மட்டுமே ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்திருக்கிறது.

இந்த இரு கொள்ளையர்களையும் பிடிக்க, குளச்சல் டி.எஸ்.பி தங்கராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கழிந்த மூன்று மாதங்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீசாரிடமிருந்து தொடர்ந்து தப்பித்த வந்த இவ்விருவரும், கடந்த வியாழக்கிழமை இரவு கொல்லங்கோடு பகுதியில் தீவிர கண்காணிப்பின் போது பிடிபட்டிருக்கின்றனர். போலீஸாரின் அந்த இரவு கண்காணிப்பின்போது, சந்தேகத்திற்கு இடமாக விலையுயர்ந்த எப்.இசட் வாகனத்தில் சென்றிருக்கின்றார் ஒருவர். சந்தேகத்திற்கிடமாக வேகமாக சென்ற அந்த இளைஞரை போலீசார் வழிமறித்து அவரை கொல்லம்கோடு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர் வள்ளவிளை பகுதியை சேர்ந்த 24-வயதான ஷலால் கஸ்பாஸ் என்பது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில்தான் அவர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பகீர் தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்திருக்கிறது.

ஷலால் கஸ்பாஸ்-க்கு தூத்தூர் பகுதியை சேர்ந்த ஜிம்சன் என்பவர் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார். ஜிம்சன், தனது உறவுக்காற பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் முதலில் அந்த காதலை ஏற்று கொண்ட அந்தப் பெண், பின் ஜிம்சன் ஏழை என்ற காரணத்தால் காதலை முறித்து கொண்டு வேறொருவரை நேசித்தார் என்று சொல்லப்படுகிறது. இதை அறிந்து ஆத்திரமடைந்த ஜிம்சனின் நண்பர் ஷலால் கஸ்பாஸ், நண்பர் ஜிம்சனுடன் சேர்ந்து அவரது காதலி நேசித்துவந்த மற்றொரு இளைஞரின் இருசக்கர வாகனத்தை இரவோடு இரவாக தீ வைத்து எரித்திருக்கிறார். இதுவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்நிகழ்வுக்குப் பிறகு, அப்பெண்ணின் கண்ணெதிரே பணக்காரர்களாக இருவரும் வாழ்ந்து காட்ட வேண்டும் என முடிவெடுத்ததிருக்கிறார்கள் ஷலால் மற்றும் ஜிம்சன். அன்று முதல், `குறுகிய காலத்தில் எளிதாக கார், பங்களா வாங்கி கோடீஸ்வரன் ஆக வேண்டும்’ என்ற நோக்கில் இருவரும் ஜோக்கர், குல்லா, குடைகளுடன் மாறு வேடத்தில் ஏ.டி.எம்.மையங்கள், நகை கடைகள், செல்போன் கடைகளை குறிவைத்து கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியதாகவும்; இருவரும் தனித்தனி பைக்குகளில் ஒரே இடத்திற்கு சென்று கொள்ளையை அரங்கேற்றியதாகவும் தற்போதைய விசாரணையில் ஷலால் ஒப்புக்கொண்டிருக்கின்றார். கொள்ளையடித்த பொருட்களை கொல்லங்கோடு பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் பதுக்கி வைத்து விட்டு, கேரளாவில் பதுங்கி விடுவதாகவும் தற்போது மேலுமொரு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றவே ஊருக்கு வந்ததாகவும் ஷலால் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஷலால் கஸ்பாஸை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ரூ.3.50 லட்சம் மதிப்பிலான செல்போன்கள், 22-சவரன் தங்கை நகைகள் மற்றும் விலையுயர்ந்த 2-பைக்குகளையும் பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஜிம்சனையும் தேடி வருகின்றனர்.

சினிமா பட பாணியில் குறுக்கு வழியில் கோடீஸ்வரனாக வாழ்ந்து காட்ட நினைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் பற்றிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com