குடிக்க பணம் தராத தாய்..! அரசு மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்த இளைஞர்...!
குடிக்க பணம் தராததால் அரசு மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி ஆதாம் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் குலாம்(30). இவரது தந்தை புரோஸ்கானுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு தந்தையை பார்க்க குலாம் மற்றும் அவரது நண்பர்களான ரஹமதுல்லா, ராஜேஷ்குமார், சுடலைமுத்து ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அப்போது குலாம், குடிக்க பணம் வேண்டும் என தனது தாயிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் தர மறுப்புத் தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த குலாம், அருகிலிருந்த மருத்துவமனையின் கண்ணாடியை கையால் குத்தியுள்ளார். இதில் கண்ணாடி முழுவதும் சில்லு சில்லாக உடைந்தது.
இதுகுறித்து மருத்துவமனை ஊழியர் பரத்(25) போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து வந்த திருவல்லிக்கேணி போலீசார் குலாம் மற்றும் அவரது நண்பர் ரஹமதுல்லா இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.