இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவலர்கள் - மின்மாற்றியில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி
சென்னையில் மதுபோதையில் வந்த இளைஞரின் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால், ஆத்திரமடைந்த அந்த நபர் மின் மாற்றியில் ஏறி தற்கொலைக்கு முயன்றபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
சென்னை தட்டாஞ்சாலை பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற அந்த இளைஞர் நேற்றிரவு மது அருந்திவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பேசின் பாலம் அருகே ரோந்துப் பணியிலிருந்த மறித்த காவல்துறையினர், பார்த்தசாரதி மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தை இயக்கி வந்ததால், அதனை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சென்று ரகளையில் ஈடுபட்ட அவ்விளைஞர், இருசக்கர வாகனத்தை தருமாறு பிரச்னை செய்துள்ளார். போதையில் இருந்ததால் காவல்துறையினர் வாகனத்தை தர மறுத்தனர்.
இதனால் அந்த இளைஞர் அங்கிருந்த மின் மாற்றியில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாகவும், பின்னர் அப்பகுதி மக்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பார்த்தசாரதியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று காவல்துறையினர் கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

