திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் இடுவம்பாளையம் காமாட்சி நகர் பகுதியில் திருவண்ணாமலையை சேர்ந்த பூபாலன் மற்றும் நதியா தம்பதியினர் தங்களது இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். பூபாலன் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல நேற்று பனியன் நிறுவனத்திற்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் நதியா மட்டும் தனியாக இருந்துள்ளார்.
இதனயைடுத்து இரவு 8 மணியளவில் பூபாலனின் சகோதரர் ஜீவா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நதியா ரத்த வெள்ளத்தில் வீட்டில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததையடுத்து திருப்பூர் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை மேற்கொண்டனர். மேலும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் நாகராஜ் சம்பவ இடத்திற்கு வந்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரனை மேற்கொண்டார்.
மாலை 6 மணிவரை அக்கம்பக்கத்தினரோடு நதியா பேசிக்கொண்டிருந்ததாகவும் அதற்கு பின்னரே அவர் வீட்டிற்குள் சென்றதாகவும் அருகிலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டில் நகை பணம் ஆகியவை கொள்ளைபோகாத நிலையில் கொலை நடந்துள்ளதற்கான காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். வீடுகள் அதிகமுள்ள பரபரப்பான பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.