குடித்துவிட்டு ரயிலில் அட்டகாசம் செய்த இளைஞர்கள்: டிக்கெட் கேட்ட டிடிஆர்க்கு கொலை மிரட்டல்
டிக்கெட் எடுக்காமல் ரயிலின் முன்பதிவு பெட்டியில் ஏறிக்கொண்டு பயணிகளை அச்சுறுத்தும் விதத்தில் நடந்து கொண்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை எழுப்பூரிலிருந்து திருச்சி செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று புறப்பட்டு தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திருவெற்றியூரை சேர்ந்த செல்வம்(18), வெங்கடேஷ்(19), ரகு(18), கணேஷ் (18), சரத்(18), ஜெய்பிரகாஷ்(18) உள்ளிட்ட 8 இளைஞர்கள் டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறியுள்ளனர். 8 பேரும் குடித்திருந்தனர். பயணிகளுக்கு அச்சுறத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர். ரயில் சைதாப்பேட்டை வந்த போது டிக்கட் பரிசோதகர் டிக்கட்டை காண்பிக்க சொல்லியுள்ளார். அதற்கு அந்த இளைஞர்கள் அவரை மிரட்டி, ரயில் பெட்டியின் கழிவறையில் இருக்கும் முகம்பார்க்கும் கண்ணாடியை உடைத்து மிரட்டியுள்ளனர். இதனால் டிக்கெட் பரிசோதகரும் ரயில் பயணிகளும் அமைதியாக இருந்துள்ளனர்.
ரயில் பல்லாவரம் நோக்கி வந்து கொண்டிருக்க இளைஞர்களில் ஒருவர் நாம் தொடர்ந்து பயணித்தால் நம்மை போலீசாரிடம் பிடித்து கொடுத்து விடுவார்கள், தாம்பரத்தில் காவல் நிலையம் உள்ளது என கூறியுள்ளான். இதனால் சுதாரித்து கொண்ட இளைஞர்கள், ரயிலின் அவசர சங்கிலியை பிடித்து இழுத்து பல்லாவரம் அருகே நிறுத்தினர். அங்கிருந்து இறங்கி கருங்கற்களை கொண்டு ரயில் மீது வீசி விட்டு சென்றனர்.
ரயில் தாம்பரம் சென்றடைந்தது. ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரயிலை சேதப்படுத்தியதாகவும் கூறினர். இதனையடுத்து பல்லாவரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது பல்லாவரம் போலீசார் 8 இளைஞர்களையும் பிடித்துவந்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். மவுன்ட் ரயில்வே காவலர்கள் இளைஞர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 6 பேரை சிறையிலும், 2 சிறார்களை கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.

